மே தினம், அதாவது பிரதி வருஷத்திய மே மாத முதல் நாளை உலகமெங்கும் உழைப்பவர்களால் பெரு நாளாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கடைசியில், முதல் அமெரிக்க தேசத்தில், தொழிலாளர், கிருஷிகர் அடங்கிய மக்கள் 8மணி நேரத்திற்கு மேல் தொழிற்சாலைகளிலும், வயல்களிலும், நிலங்களிலும் வேலை செய்வது அநீதி என்றும், அதனை வற்புறுத்துவது அதனினும் அநீதி என்றும், 8மணி நேர உழைப்பே போதுமானதென்றும் ஒரு கிளர்ச்சி புறப்பட்டது. அக்கிளர்ச்சியை முதலாளிகள் அடக்க முயன்றனர். அவ்வடக்கு முறை, மே மாதம் முதல் நாள் கொடூரமாக முடிந்ததன் பயனாக, எளிய தொழிலாளர், விவசாயிகளின் இரத்தம் சிந்தியபடியால், அந்நாள் தொழிலாளர்களின் மாபெரும் தியாக ஞாபகார்த்தமாகக் கொண்டு உலக முழுமையும் அத்தினத்தைக் கொண்டாடிக் கொண்டு வருகின்றார்கள்.
இந்தியாவில் மே தினம்
இந்தியாவில் சென்னை மாநகரில் தான் முதன்முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதியும் தலைசிறந்த சீர்திருத்தவாதியும் ம.சிங்காரவேலர் தான் 1923 -இல் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் தொழிலாளர் தின விழாவைக் கொண்டாடினார்.