சற்றுமுன்

ரயில் - கார்த்திகேயன் சுகதேவன் - சிறு கதை

பொழுதுவிடிந்து, போர்த்திய இருள் மெதுவாக விலகிய ஊருக்குள், சுருட்டு பத்தவைத்துக் கொண்டு கண்மாய் கரையோரமாக கொல்லைக்கு போனவள் வேலம்மா கிழவி. காடு, கழனிகளால் சூழப்பட்ட அந்த ஊருக்குள் புகுந்த ஏதோ வித்தியாசமான மிருகங்களின் சப்தங்களாக அது இருக்குமோ என எண்ணித்தான் முதலில் பயந்திருக்கிறாள் அவள்.
     திரும்பிப் பார்த்த கிழவி திகைத்துப் போயிருக்கிறாள். தகவல் சொல்ல ஊருக்குள் விழுந்தடித்து ஓடிவந்திருக்கிறாள்.
     ”சனங்களுக்கு உதவ காரு, பஸ்ஸூ கூட வரமுடியாத ரோடு வசதியில்லாத ஊரிது... இந்த அனாதிப்பய ஊர்ல வந்தா இப்படி ஆவணும்...”
     ”கலெக்குட்டரு... மந்திரின்னு மனு கொடுத்தப்போல்லாம்   நம்மூருல நிக்காதது, இப்போ சொந்தம், பந்தம் போல சொல்லாம, கொள்ளாம நம்ம மண்ணுல வந்து படுத்துக் கிடக்கு அப்பு...”
     - வேலம்மா கிழவிதான் தான் பார்த்து வந்ததை அவர்களுக்கு சொல்லிக் கொண்டே தானும் அக்கூட்டத்தோடு சேர்ந்து ஓடினாள்.
     ”எவன் நம்மள கவனிக்கலேன்னாலும், அஞ்சு வருஷத்துக்கு ஒரு தடவை பலபேரை வாழவைக்கற சாமிங்க நாமன்னு அதுக்கு கூட தெரிஞ்சுருக்கு ஆத்தா... அதான் நம்ம மண்ணுல வந்து விழுந்துகிடக்கு...” என்றான் ஒரு ஆள்.
     அந்த சனங்களுடன் ஆறுவயதே நிரம்பிய கருப்புவும் ஒருவனாக தன் ஆத்தாளின் கையைப் பிடித்துக் கொண்டு தனது பிஞ்சுக் கால்கள் நோக துள்ளிக் குதித்து ஓடினான். ஆத்தாளோடு கண்மாயில் குளிக்கப் போகும்போது எட்டத்தில் பார்த்ததை இப்போது கிட்டத்தில் பார்க்கப் போகிறோமென்ற ஆனந்தம் அவனுக்கு.
     ஆளாளுக்கு ஒவ்வொன்றை சொல்லிக் கொண்டு ஊரே ஒன்றாகச் சேர்ந்து கண்மாய்கரையை நோக்கி ஓடியது. அங்கிருந்து சற்று தொலைவில்தான் அவ்வூரின் வழியாக அந்த ரயில் தெற்கிலிருந்து வடக்கிலும், வடக்கிலிருந்து தெற்கிலுமாக ஒரு நாளைக்கு இருமுறை தினமும் ஓடிக்கொண்டிருந்தது. காரு வசதி கூட இல்லாத ஊருக்குள், ஊரு பார்க்கத் தினமும் வரும் விருந்தாளியைப் போல, அந்த ரயில் அவ்வூருக்கு வெளியே தினமும் ஓடும். இப்போது விபத்துக்கு உள்ளான அந்த ரயிலைப் பார்க்க ஊர் முச்சூடும் சேர்ந்து போகிறது.
     ஆத்தாளின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் சற்றே சிரமத்துடன் தான் ஓடினான் கருப்பு. இருந்தாலும் ரயிலைப் பார்க்கப் போகிறோமென்ற கொண்டாட்டம் அவனுக்கு.
     அரக்க, பரக்க ஓடிய கூட்டம் சம்பவ இடத்தை அடைந்ததும் அப்படியே மலைத்துப் போனார்கள்.
     ”ஆத்தீ....”, என பெண்டுகள் வாய்விட்டு கத்திவிட்டார்கள்.
     கருப்பு கூட கண்களைப் பெரிதாக விரித்து திடுக்கிட்டுப் போனான்.
     பரந்து கிடந்த பூமியில் ஒரு நீண்ட மலைப்பாம்பு வயிறு வெடித்து செத்துப் போனது போல சிதைந்து கிடந்தது அந்த ரயில்.
     வெடிகுண்டு வெடித்துத்தான் சிதறிவிட்டதாம், அந்த ரயில். முட்டையிலிருந்து குஞ்சு வருவது போல, ரயிலின் பெட்டியிலிருந்து வெளியில் வந்த ஒரு பயணிதான் அந்த தகவலை சொன்னார்.
     கலைந்து கிடந்த ரயிலின் பெட்டிகள் வானம் பார்த்து மல்லாந்தும், ஒருக்களித்தும் கிடந்தன. பெட்டிகளுக்குள்ளிருந்து வெளிவந்து கொண்டிருந்த பயணிகள் தங்கள் உறவுகளையும், உடமைகளையும் அந்த வலியிலும் பத்திரப்படுத்த பர,பரத்தார்கள்.
     வெடித்துச் சிதறிய பெட்டியிலிருந்து புறப்பட்ட தீயின் நாக்குகள் தீண்டிவிடுமென்ற பயம் ஒருபுறம்...முந்திப் பிழைக்க வேண்டிய அவசரம் மறுபுறமென ஆணும், பெண்ணும் அவசர, அவசரமாக பெட்டியிலிருந்து வெளியில் குதித்துக் கொண்டிருந்தார்கள்.
     அவர்களோடு செய்வதறியாது திகைத்து வெளியில் வந்து விழுந்த குழந்தைகளும் பாவம், கூட்டத்தில் நசுங்கி வெளியில் வந்த வலியில் அழுது கொண்டிருந்தார்கள்.
     ”ஓடுங்க...ஓடுங்க...போய் காப்பாத்துங்க...”
     - ஊர் பெரிய தலை உத்தரவிட, கிராமத்து சனங்களும் பெட்டியின் மீதேறி நின்றுகொண்டு ஒவ்வொருவராக பெட்டியிலிருந்து உருவி எடுத்து வெளியில் போட ஆரம்பித்தார்கள்.வெளியில் வந்து விழுந்தவர்களுக்கு தேவையறிந்து சேவைகள் கொடுக்கப்பட்டது.
      நாதியற்றவர்களுக்குத்தானே நாதியற்றவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமெனத் தெரியும். உயிரின் விலை எத்தனை கொடுத்தாலும் ஈடு செய்ய முடியாதெனினும் உயிர் வளர்க்க வயிறு வாடிய கூட்டம் இன்னும் வாடியது, அங்கு சில உயிர் காக்க.
     இதுதான் ரயிலா... எத்தனை பேரை ரத்தம் பார்க்க அடித்துப் போட்டுவிட்டது.... தூங்குகிற ரயிலை மெதுவாக தொட்டுப் பார்க்க அருகில் சென்றான், கருப்பு.
     ஆனாலும் ஒரு பயம்.... திடீரென்று அது முழித்துக் கொண்டு மறுபடி ஊஊஊஊ....என்று ஊளையிட்டுவிட்டால்....???
     அப்பா........... சப்தம் காதைக் கிழித்துவிடும்... வேண்டாம், அது அப்படியே படுத்துக் கிடக்கட்டுமென விலகி வந்தான்.
     ”எலேய்... தூரமாப் போடா... நெருப்பு பரவுது,,, மேல பட்டுரும்...” என்றாள் ஒரு பெண்.
     ஓடி, விலகி நின்றான்.
     ”அங்கனயே நில்லு...”, என்று தூரத்திலிருந்து சொன்னாள் அவன் ஆத்தா.
     கருப்பு சற்றே தள்ளி நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.
     வெள்ளிக் கிழமை சந்தைக்கு போகும் போது பார்த்த கழைக்கூத்தாடியை இப்போது நினைத்துக் கொண்டான் கருப்பு. அவனும் இந்த ரயிலைப் போலத்தானே கயிறு மேல் நடந்து செல்வான். அவன் கயிறு மேல் நடப்பான்... இது கம்பி மேல் நடக்கிறது....
     தண்டவாளத்தில் கற்களை அடுக்கி வைத்து விளையாடிய ஒரு நாள்கூட இப்போது அவன் நினைவில் வந்தது.
     ” எலேய்... தண்டவாளத்துல கல்லுங்களை வைக்காதீங்கடா... ஓடியாற ரயிலு தடுக்கி விழுந்தா அடிபட்டுடும்டா...”, என்பான் ஒரு நண்பன்.
     ” அடப்போடா... இந்த கல்லையெல்லாம் அது பொடிப் பொடியா நசுக்கித் தள்ளிடும், தெரியுமில்லே...” என்பான் இன்னொரு நண்பன்.
     ஆனால் எத்தனை நாள்தான் சரியாக அது நசுக்கித் தள்ளும்... ஏதோ தவறுதலாக ஒருநாள் அதுவும் தடுக்கி விழுந்துவிட்டால் என்ன ஆவது?... என கருப்புவும் அந்த காரியத்தை செய்வதேயில்லை.
     இன்றுகூட அப்படித்தான் ரயில் கற்களை வைத்ததால் தடுக்கி விழுந்திருக்குமோ....என எண்ணினான். பின், அனிச்சையாக சுற்று, முற்றும் பார்த்தான். கற்களை அடுக்கி வைத்து விளையாடிய அந்த நண்பர்கள் யாராவது அங்கிருக்கிறார்களா எனத் தேடினான். இருந்தால், “ பார்த்தியாடா... ரயிலு தடுக்கி விழுந்துடுச்சு பாரு... இனிமே இப்படியெல்லாம் பண்ணாதீங்க... எத்தனை பேரு செத்துக் கிடக்காங்க பார்த்தீல்ல...”என சொல்ல வேண்டுமென நினைத்தானோ, என்னவோ...
     "பக்கத்தூரு காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தாச்சா”
     ”கொடுத்திட்டாங்க...”
     ”ஊருக்குல்ல வர்றதுக்கு சரியான பாதை வசதி கூட கிடையாதே. எப்படி வருவாங்களாம்”
     ”மண்ணு அள்ளுற பொக்லைன் எஞ்சினுக்கு சொல்லியிருக்காகளாம். கொஞ்ச நேரத்துல காரு, வேணு வர்றதுக்கெல்லாம் அதைவச்சு வசதி பண்ணிடுவாங்களாம்”
     ”அடப்பாவிகளா. நம்மளுக்கு தலைமுறை, தலைமுறையாவுல்லே அதை செய்யாம இழுத்தடிச்சானுவ...”
     பக்கத்து டவுணைச் சேர்ந்த பழைய சேர்மனின் மகன்தான் அதிலிருந்ததொரு அரசியலையும் மெதுவாக அவிழ்த்துவிட்டிருந்தான்
     ”நான் சொன்னேன்னு சொல்லிடாதீங்க... ரோடு போட்டாச்சுன்னு ஏற்கனவே இந்த பயலுவ காசு வாங்கிட்டானுவளாம். இப்போ அதிகாரிங்க, அரசியல்வாதிகள்லாம் வந்து பார்த்தா குட்டு அம்பலமாயிடும்னுதான் அவசர, அவசரமா பாதைக்கு வழி உண்டாக்கப் போறாகளாம்...”
     ”இதை கண்டிப்பா பார்வையிட வர்ற ஆளுககிட்டே சொல்லியே ஆகணும்...”
     ”மீடியாகாரங்க வருவாங்க. அவங்ககிட்டே சொல்லுங்க. அப்போதான் அது பெரிசாகும். ஆனா, நான் சொன்னேன்னு மட்டும் தயவுசெஞ்சு சொல்லிடாதீங்கப்பு...”, என்றான் பழைய சேர்மன் மகன்.
     ”மீடியா வருமா?.”
     ”மீடியா கண்டிப்பாக வரும். ஒருதடவை கரண்டு கம்பி விழுந்து நாய் செத்துப் போனதுக்கு நியூஸு போடமாட்டேன்னுட்டாங்க. அதுவே நம்ம வெள்ளைச்சாமி அதே கரெண்டு கம்பி விழுந்து செத்தப்போ நியூஸு போட்டாங்க. அவங்களுக்கு மனுஷப்பய சாவுன்னாதான் நியூஸு... இந்த விசயத்துக்கும் விழுந்தடிச்சு வருவாங்க. பாருங்க...”, என்றார் ஒரு கிராமவாசி.
     புறக்கணிப்புகள் பழகிப்போனவர்களுக்கு வாழ்க்கை அடுத்த நிகழ்வையும் கூட சரியாக அனுமானிக்கக் கூடிய சக்தியை கொடுத்ததை சில நிமிடங்களிலேயே தெளிவாக தெரிந்து கொள்ள முடிந்தது.
     எங்கிருந்துதான் வந்தார்களோ தெரியவில்லை. அத்தனை மீடியாவும் வந்தது.
     ”நான் சொன்னேனில்லே... வந்துட்டாங்க பார்த்தீகளா...”
     ”உண்மைதாண்டா. உன்னையவே எங்க மக்களுக்கு தலைவனா நிக்கவைக்கணும்.”
     ”ஆமாமா. எட்டுஊரு பொரணி பேச நம்ம ஊரு திண்ணையும், சாவடியும் போதும். எதை போட்டா, எது வரும்னு தெரிஞ்சு பேசற ஆளுகதான் நமக்குத் தேவை...”
     பொக்லைன் வைத்து சாலை வசதி செய்வதையும், அதே சாலையின் வழியாக ஊருக்குள் நுழைந்த ஆம்புலன்ஸுகளையும் விடாமல் ஒளிபரப்பியது, அத்தனை மீடியாவும்.
     "எல்லாம் போச்சு. ஊர்க்காரப் பயலுவ அத்தனையையும் போட்டுக் கொடுத்துட்டானுங்க... ”, என சாலை விடயத்தில் ஊழல் செய்தவர்கள் புலம்பி கொண்டிருந்த அதே வேளையில்தான் கொஞ்சமாக எரிந்து கொண்டிருந்த நெருப்பை முழுதுமாக அணைத்திருந்தார்கள் தீயணைப்பு படையினர்.
     இருப்பினும் ஒவ்வொருவரும் ஒவ்வொருவித பர,பரப்பிலேயே ஓடிக்கொண்டிருந்தார்கள்.
     ஊர்க்காரர்கள் ஒருசிலர் இப்போது தைரியமாக பெட்டிகளுக்குள் நுழைந்து அடிபட்டவர்களை காப்பாற்றும் பணியைத் தொடர ஆரம்பித்தார்கள். மீட்புக் குழுவினருக்கு உதவும் கூட்டத்தில் தானாகவே தங்களை கொண்டு போய் சேர்த்துக் கொண்டனர்.
     அதிகாரிகளும் பயணிகளும் ஊர்க்காரார்கள் மீது மிகவும் மரியாதை கொண்டனர்.
     இப்படிப்பட்ட உதவும் கரங்கள் படைத்த மக்களுக்கா இவ்வளவு நாள் உரிமைகள் மறுக்கப்பட்டதென்றுதான் பலரும் நினைத்தார்கள். அதை அம்மக்களிடம் குசலம் விசாரித்த போது, ஊரே மகிழ்ச்சியானது.
     ஆறுவயதே நிரம்பிய அந்த பிஞ்சுகுழந்தை கருப்பு இப்போது கொஞ்சமான தைரியத்தோடு ரயிலை அருகில் சென்று தொட்டுப் பார்த்தான். அது ஊஊஊஊ..... என்று பெரிதாக சப்தம் போடவில்லையெனத் தெரிந்ததும் யாருக்கும் தெரியாமல் ஒரு பெட்டிக்குள் மெதுவாக ஏறினான்.
     பெரிய, பெரிய வசதி படைத்தவ்ர்களை மட்டும்தான் அது ஏற்றிச் செல்லுமென நினைத்திருந்த அந்த குழந்தை தனக்கு மிகவும் அன்ன்யமானதொரு இடத்தில் நுழைந்துவிட்டது போலத்தான் உணர்ந்தான்.
     அவன் ஏறிய பெட்டியில் யாவரும் வெளியேறியிருந்ததால் உள்ளே ஒருவரும் இல்லை. வரிசை, வரிசையாக மர பெஞ்சிகள் தடித்த கம்பிகளைக் கொண்டு பொருத்தப்பட்டிருந்தது. ஓரத்தில் சன்னல்களும்... மேலே தொங்கிக் கொண்டிருந்த மெத்தைப் படுக்கைகளும்... அதற்கும் மேலே கம்பிகளுக்குள் மின்விசிறிகள்... மின்விளக்குகளென வித்தியாசமாக இருந்தது.
     அவனது வீட்டில் மட்டுமல்ல. அந்த ஊரிலேயே அப்படியொரு வசதி கொண்ட இருப்பிடத்தை அவன் கண்டதில்லை.
     ஏன் அது தங்களுக்கும் கிடைக்கவில்லையென அக்குழந்தை யோசிக்கவில்லை. அதையெல்லாம் ஒரு எட்டாத நிலவாக மட்டுமே பார்த்து ஏங்கத் தோன்றியது.
     அவர்களது ஊரில் பால்ராசு என்ற பெரும் பணக்காரர் ஒருவர் இருந்தார். ஊருக்குள்ளேயே அவரது வீடுதான் பெரிய காரைவீடு. ரெண்டு மாடி இருக்கும் அந்த வீட்டில்.
     ”ஏம்மா, அந்த மாதிரி வீடு நமக்கும் கிடைக்காதா?”,என்பான் அவன் ஆத்தாளிடம்.
     அவன் அப்படிக் கேட்கும்போதெல்லாம். “வானம் பார்த்த பூமியை நம்பி வாழற நமக்கெல்லாம், மச்சு மேல மச்சு வச்ச மாடி வீடுக மேல மனசு போகப்படாதுடா” என்பாள் அவன் ஆத்தா.
     ’ஏன் கூடாதாம்?. ஊருக்கெல்லாம் சோறு போடுறவக நாம. நாமதான இவங்களுக்கெல்லாம் சாமி மாதிரி.  நமக்கு ஏன் நல்லது நடக்கப்படாது’ என அவனது குடிசைக்கு அருகிலிருக்கும் சங்கிலி கூட சொல்லுவாரு.
     ஆனா, அவரு சொல்லுறதைத்தானா அங்கே இருக்கறவக கேட்பாக.
     ”அவன் கெடக்கான் குடிகாரப் பய. கொடி புடிக்கிறேன்... கூட்டம் சேர்க்கறேன்னு தின்னுற சோத்துலயும் மண்ணை அள்ளிப் போட்டுருவான்”, என்பார்கள்.
     கருப்புவைப் போன்ற இல்லாத குழந்தைக்கு இப்படி ஏதாவது நடந்தால்தான் கைக்கு எட்டும் தூரத்திலாவது கனவுகள் பலிதமாகிறது.
     ”முடிஞ்சவரை சிக்குனவனுகளை சாத்தணும். அப்போதான் சேர்மன் அய்யாவோட ஆத்திரம் அடங்கும்....”
     ”காளியப்பன் டவுசருக்குள்ள அஞ்சு பவுணு சங்கிலி இருக்கு. என் கண்ணால பார்த்தேன்...”
     ”மூக்கன் நல்ல வேட்டையாடியிருக்கான்...”
     ”விடு... விடு... போகட்டும் விடு... புடிச்சுக்கலாம்... எங்கே போயிடுவானுங்க...”
     - பக்கத்து பெட்டியிலிருந்து வந்த அந்த சத்தத்தை கேட்டதும் சட்டென்று பதுங்கிக் கொண்டான் கருப்பு.
     அது அவர்களது ஊர்க்காரர்கள்தான். அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்களென்று தெரியவில்லை. அவர்கள் போகும்வரை காத்திருந்து தானும் அப்பெட்டியிலிருந்து யாரும் பார்க்காமல் மெதுவாக இறங்கினான்,கருப்பு.
     இறங்கும் போது ஆனந்தம் தாளவில்லை, கருப்புவுக்கு. நாளை தன் நட்புகளிடமெல்லாம் கூட சொல்லி மகிழ்வான், இந்த சங்கதியை.
     அவனும், அவனது ஆத்தாவும், அப்பனும் சேர்ந்து ஒண்டிக் கொண்டிருக்கும் குடிசைக்கு பக்கத்தில் பொன்னா தாத்தாவென்று  ஒருவர் இருக்கிறார். இரவுகளில் சாராயம் குடித்துவிட்டு வரும் அவரைப் போலத்தான் அந்த ரயிலும் போதையில் ஆடி, ஆடி வருவதாக எண்ணிக் கொள்வான் கருப்பு. சில சமயங்களில் போதை அதிகமானால் பெரிசு பொத்தென்று விழுந்துவிடும்.
     அப்படித்தான் இந்த ரயிலும் விழுந்து விட்டதோ....
     எது, எப்படியோ... ஆத்தாளோடு கண்மாயில் குளிக்கப் போகும்போது பார்த்த அந்த ரயிலில் ஏறியும் பார்த்து விட்ட மகிழ்வு அந்த குழந்தைக்கு மனதெல்லாம் விரவிப் போனது.
     ”குண்டு வெச்ச அந்த எழவெடுத்தவன் யாராம்?.... எதுக்காவ வெச்சானாம்?...”
     ”இன்னும் சரியா தெரியலைங்கறாங்க மீடியாக்காரங்க...”
     ”இத்தனை உசிருகளை கொலை செய்யுற அளவுக்கு அவனுக்கு என்ன வெறி.... எதுக்காவ இந்த கோவம்?. யாரு என்ன செஞ்சாகளாம்?...”
     ”எதுவும் தெரியலையாம். இனிமேதான் தெரியுமாம். ஆனா ஒன்னு நிசம்டா...”
     ”என்ன?....”
     ”கால, காலமா  நம்ம ஊருக்கும் அடுத்த ஊருக்கும் உண்டான போக்குவரத்து வழியையே அடைச்ச  நாரப்பயலுக செய்ததை விடவா பெரிய கொடுமை இது...?”, என்றான் ஒரு கிராமத்தான்.
     ”நமக்காக எதுவும் செய்வான்னுதானே ஓட்டுப் போட்டு நாம இவனுங்களை தேர்ந்தெடுக்கிறோம். ஆனா நம்ம வவுத்துலயே அடிச்சுட்டானுங்களே...”
     மாறி, மாறித் தங்கள் ஆத்திரத்தை பரிமாறிக் கொண்டார்கள்.
     பேசி மட்டுமே ஒன்றும் ஆகப் போவதில்லையெனத் தெரிந்திருந்தும் அப்பேச்சில் ஒரு சுகம் காணுவதற்காகவே பேசியது போல பேசினார்கள்.
     இந்த வலியார், மெலியார் போராட்டமெல்லாம் அவர்கள் அறியாதவர்களல்ல. அவர்களுக்கும் இதன் சூட்சமம் தெரியும். இவர்கள்தானே நாளை அவர்களாகவும் மாறிப்போகிறார்கள். இறுதிவரை ஒன்றும் புரியாமல் வாழ்பவர்கள்தான் பாவம்.
     இதுதான் பிழைப்புக்கான போராட்டமென்பது. தான் வாழ, பிற உயிரை ஓட,ஓட விரட்டி குருதி குடிக்கும் வெறித்தனமென்பது.
     இங்குதான் மனிதனும் மிருகமும் வேறுபடுகிறார்கள். தனது உணவுக்கும், உறைவிடத்திற்கும் மட்டுமே ஓடும் அவ்வோட்டத்தில் தன்னைச் சார்ந்தவர்களுக்காகவும் ஓடும் இடத்தில்தான் மனிதன் மிருகத்திலிருந்து மாறுபடுகிறான். மானுடம் வாழ்கிறது. இவைகள் எப்போதாவதுதான் நடக்கிறது. அதிசயமாய் அரங்கேறுகிறது.
     அப்போதுதான் அது நடந்தது.
     காயம்பட்டவர்களில் சிலருக்கு மீட்புக் குழுவினர்கள் மருத்துவ சேவை செய்து கொண்டிருக்க, உயிரிழந்தவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றி கிராமத்து மக்கள் உதவிகள் செய்து கொண்டிருக்க, தொலைந்து போன சொந்தங்களையும், உடமைகளையும் தேடி சிலர் பர,பரத்துக் கொண்டிருந்த அந்த வேளையில்தான் அவர்கள் அடித்து இழுத்து வரப்பட்டனர்.
     அவர்களோடு ரயில்வே போலீஸாரும் வந்தார்கள்.
     ”ஊர்க்காரப் பயலுவ யாரும் பயணிங்க பக்கத்துல போகப்படாது. தள்ளி நில்லுங்க...செத்துக் கெடக்கிற ஆளுகளோட நகை, நட்டை கொள்ளையடிச்சது போதும். விலகிடுங்க...”, என சப்தமெடுத்து கத்தினார் அந்த ஊரின் எல்லைக்கு உட்பட்ட தற்போதைய சேர்மன்.
     மீடியாக்காரர்களிடம் தன்னைப் பற்றி தவறாக அம்மக்கள் சொல்லிவிட்டார்களென்ற கோபம் அவருக்கு.
     ”யாருய்யா திருடனுங்க... பார்த்துப் பேசுங்க...ஊருக் காசை கொள்ளையடிச்ச ஆளுகளைவிட நாங்க ஒன்னும் பெரிய திருடங்க இல்லை”, என்றார் ஒரு பெரிசு.
     மீடியாக்காரர்கள் முன்பிலேயே அதையும் சொன்னதால் கோபம் தலைக்கேறியது அவருக்கு.
     ”யாரை சாடை பேசறே... அங்கே பாரு, உன் ஊருக்காரனுவளை. அவனுகளையே கேளு... செயினு, தோடு, வளைவி, கம்மலுன்னு எத்தனையை உருவிட்டு விட்டிருக்கானுக பாரு. தாலியைக் கூட விடலை. நீங்கள்லாம் அடுத்தவனை வாய்க்கு வந்தபடி மீடியாக்காரங்க கிட்டே சொல்லுறீங்க....”, என்றார்.
     அடித்து இழுத்துவரப்பட்ட கூட்டத்தில் காளியப்பன், மொக்கை, நாகராசன், சக்கையன், மூக்கன், சாம்பன் என்று ஒரு கும்பலே இருக்க, அத்தோடு ஆறுவயதே நிரம்பிய கருப்புவின் அப்பன் பச்சையும் நின்றிருந்தான்.
     படமெடுக்க கேமராவை தூக்கிக் கொண்டு ஓடிய மீடியாக்காரர்களிடம், “அய்யா... அய்யா... யாரோ ஒன்னு ரெண்டு பேரு தப்பு செய்ததுக்காவ எங்க ஊரையே படமா காட்டி அசிங்கப்படுத்திறாதீக. இங்கே நல்லவகளும் இருக்காவ...” என பர, பரப்பாக ஓடிப்போய் காலில் விழாத குறையாக பேசினார் சேர்மன்.
     ஊரின் மானத்துக்காகப் பேசிய சேர்மன் நிமிடத்தில் ஊர்க்காரர்களிடம் நல்லவராகிப் போனார். ஆனால், அவ்வளவு நேரம் பம்பரமாகச் சுழன்று மீட்புக் குழுவினரோடு சேர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்த ஊர்க்காரர்கள்தான் எல்லோருடைய பார்வையிலும் கெட்டவர்களாகிப் போனார்கள்.
     உதவி செய்யப் போன மீதிப் பேரையும் போலீஸார் ஒதுக்கித் தள்ளிவிட்டனர். அதுவரை உதவி செய்தவர்களையும் தயவு தாட்சண்யமின்றி போலீஸ்காரர்கள் பரிசோதித்து அனுப்பினார்கள். ஏதும் பேசாமல் ஊரே தலை குனிந்து நின்றது. கருப்புவுக்கு எதுவுமே புரியவில்லை. அவனும் அமைதியாக நின்றிருந்தான். ஆனால் அப்போதும் அந்த ரயில் பெட்டிகளைத்தான் பார்வையிட்டான்.அடிபட்ட வலியில் ஊர்க்காரர்களை புழுவைப் பார்ப்பது போல பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள் பயணிகள். அவர்களின் பின்னே அவனது ஆசைக்குரிய ரயில் பிரம்மாண்டமாக படுத்துக் கிடந்தது.
     அதன்பின் நடந்த ஊர்பஞ்சாயத்துக் கூட்டத்தில் மற்றவர்களோடு சேர்ந்து கருப்புவின் தகப்பன் பச்சையும் சவுக்கடி பெற்றான். அதைக் கண்ட பிறகுதான் கருப்பு துடித்துப் போனான்.அந்த ரயிலின் மீது அளவில்லாத வெறுப்பும் கொண்டான்.
     இப்போதெல்லாம் ஆத்தாளோடு கண்மாயில் குளிக்கப் போகும்போது தூரத்தில் ஓடும் அந்த ரயிலைப் பார்ப்பதற்கு கருப்புவுக்குப் பிடிப்பதேயில்லை. ஊஊஊ... என்று சப்தமெடுத்து ஓடும் அந்த ரயிலை பார்க்கப் பிடிக்காமல் முகத்தை வேறுபக்கமாக திருப்பிக் கொள்கிறான்.

tamil short story about tamil people mind set while travel in train inside india

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.