ஒரு காட்டில் சுபத்ரை என்கிற வேடர் குலப் பெண், தன் கணவருடன் வாழ்ந்து வந்தாள். வெகு நாட்களாக இத்தம்பதியருக்கு குழந்தைப்பேறு இல்லாமல், பல விரதங்கள் அனுஷ்டித்து ஒரு குழந்தைப் பிறந்தது. அந்தக் குழந்தையை இருவரும் சீராட்டி வளர்த்து வந்தனர். அந்த ஐந்து வயது பாலகனை உணவூட்டி உறங்க வைத்துவிட்டு, நீர் எடுத்து வர அருவிக்குச் சென்றாள் அப்பெண், தன் குடிலுக்குத் திரும்பியவள் திடுக்கிட்டாள். அவளுடைய பாலகனை ஒரு நாகம் தீண்ட, விஷம் ஏறி உயிருக்கு மன்றாடுகிறான்.
தரையில் விழுந்து அழுது புலம்புகிறாள் அவள். கூக்குரல் கேட்டு ஓடி வருகிறான் கணவன், விஷயமறிந்து, அப்பாம்பு தங்கியிருந்த புற்றைத் தகர்த்து அந்தப் பாம்பைப் பற்றி சுபத்ரையிடம் இழுத்து வந்தான். சுபத்ரை, நம் குழந்தையை தீண்டிய இப்பாம்பை கத்தியால் வெட்டிக் கொல்லட்டுமா? என்கிறான் வேடன். இந்தப் பாம்பைக் கொன்றுவிட்டால் என் குழந்தை உயிர்த்தெழுமா? எனக் கேட்கிறாள் சுபத்ரை. இப்பாம்பைக் கொல்லாவிட்டால் மாத்திரம் நம் குழந்தை உயிர்த்தெழுமா? என்கிறான் கணவன்.
இந்தப் பாம்பைக் கொன்றுவிட்டால், உலகத்தில் பாம்பு வர்க்கமே இல்லாமல் போகுமா? பாம்பு வர்க்கம் இல்லாமல் போகாது. ஆனால், துஷ்ட பிராணிகளின் எண்ணிக்கை குறைந்துவிடும் அல்லவா? இவ்வுரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த பாம்பு பேசியது; மூடா! அவள் என்னைக் கொல்ல வேண்டாம் என்கிறாள். நீ கொல்வேன் என்று அடம்பிடிக்கிறாய். நன்றாக யோசித்துப்பார். இங்கு நீ, உன் மனைவி, உங்கள் குழந்தை இருக்கிறீர்கள். நான் தீண்டிக் கொல்ல வேண்டும் என்றால் உன்னையோ, உன் மனைவியையோ கொன்றிருக்கலாம்.
உங்கள் குழந்தையை மட்டும் தானே தீண்டினேன். அதுவும் என்னை ம்ருத்யு தேவதை ஏவியதால் தான் குழந்தையை கடிக்க வேண்டியதாயிற்று. இதில் என் தவறு எதுவுமில்லை என்றது. யார் அந்த ம்ருத்யு? என்றான் வேடன். ம்ருத்யு தேவதை அவன் முன் தோன்றினான். குழந்தை இறப்புக்கு நீயா காரணம்? என்றான் வேடுவன்.
நான் காரணமில்லை. என்னைக் காலன் ஏவினான். பாம்பை ஏவி இந்தக் குழந்தையை கடிக்கச் செய்தேன் என்றான் ம்ருத்யு தேவதை. காலன் என்பவன் யார்? என வேடுவன் கேட்க, யமதர்மன் அவன் முன் தோன்றினான். இந்தக் குழந்தை இறக்க நீதான் காரணமா? நான் காரணமில்லை, என்னை பகவான் ஏவினான். நான் ம்ருத்யு தேவதையை ஏவினேன். ம்ருத்யு தேவதை பாம்பை ஏவினான். பாம்பு குழந்தையைக் கடித்தது என்றான் யமதர்மன். உன்னை ஏவிய அந்த பகவான் யார்? ஸ்ரீமந் நாராயணன் அந்த வேடுவனுக்குக் காட்சியளித்தான். எல்லாற்றுக்கும் காரணம் நீதானா? என்றான் வேடுவன். பகவான் கூறுகிறார்; மண்ணில் பிறந்த ஒவ்வொரு வரும் இறக்க வேண்டும் என்பதே விதி. பாம்பு கடித்து உன் குழந்தை சாக வேண்டும் என்பதே நியதி.
அது நிர்ணயமானதால் நானே நடத்தி வைத்தேன். எல்லோரும் தப்புவதற்கு ஒவ்வொரு காரணம் சொல்கிறீர்கள். நான் நம்ப மாட்டேன். என்று குழந்தையைக் கடித்த இந்தப் பாம்பை வெட்டியே தீருவேன் என்று ஆவேசத்துடன் கத்தியை எடுக்க தன் தோள் பைக்குள் கையை விட்டான் வேடுவன். வேடுவனுக்கே தெரியாமல் அவன் தோளில் மாட்டியிருந்த பைக்குள் வேறொரு பாம்பு புகுந்து இருந்து. அது அவனைத் தீண்டிவிட்டது. உடனே அவன் வாயில் நுரை தள்ளி, மயங்கி கீழே விழுந்தான். இதைச் சற்றும் எதிர்பார்க்காத அவன் மனைவி உடனடியாக காட்டுக்குள் சென்று மூலிகையைப் பறித்து வந்து கசக்கிப் பிழிந்து, அவன் வாயில் சாற்றை ஊற்றினாள்.
வேடுவன் சற்று நேரத்தில் மயக்கம் தெளிந்து பிழைத்துக் கொண்டான். இந்நிகழ்வைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் சிரித்தனர். பகவான் சொன்னார்; எந்தப் பாம்பு கடிக்கு எந்த மூலிகை கொடுத்தால் விஷம் இறங்கும் என்ற ஞானம் படைத்தவள் உன் மனைவி.
அப்படியிருந்தும் தன் குழந்தை பிராணனுக்கு மன்றாடிக் கொண்டிருக்கும்போது அவளுக்கு ஏன் அந்த ஞானம் வரவில்லை? குழந்தையை ஏன் காப்பாற்றவில்லை? ஆனால் உன்னைக் காப்பாற்றிவிட்டாள்.
அதற்கு என்ன? காரணம்?
பாம்பு கடித்து பிழைக்க வேண்டும் என்பது உன் விதி. பாம்பு கடித்து இறக்க வேண்டும் என்பது உன் குழந்தையின் விதி. அது அவரவர் வினைப்பயன்தான் என்றார். பரமாத்மா கூறியது எத்தகைய சத்தியம்