ஜப்பான் நாட்டின் தொழில்நுட்பங்கள் சிறந்தவை மற்றும் துல்லியமானவை என்பதை உலகம் அறியும். காகிதத்திலும் சற்று வித்தியாசமான தொழில்நுட்பம் ஒன்றை முயற்சித்திருக்கிறார்கள். ஜப்பானியர்களுக்கு காகிதத்தின் மீது உள்ள காதலை உணர்த்த ஒரிகாமி ஒன்று போதும். இருந்தாலும் அது செயற்கையானதுதானே என்று நினைத்திருப்பார்கள் போல. அதனால் காகிதத்தை உயிர்த்தெழ வைத்துவிட்டார்கள் அந்த காகிதக் காதலர்கள்.
ஜப்பானின் தினசரி நாளிதழ் தி மைனிச்சி (The mainichi). இது ஜப்பானின் மிகப்பெரிய,அதிகமாக விற்பனையாகும் நாளிதழ் நிறுவனங்களில் ஒன்று.
இந்த மைனிச்சி நிறுவனம் தனது செய்தித்தாள்களில் இருந்து செடிகள் வளரும் வகையிலான காகிதத்தை சென்ற ஆண்டு தயாரித்தது. இந்தச் செய்தித்தாள்கள் மண்ணில் விழுந்த சில நாட்களில் அதில் இருந்து சிறிய தாவரங்கள் வளரத் துவங்கும். செய்தித்தாளை படித்து முடித்த பின்பு மண்ணில் போட்டு தண்ணீர் ஊற்றினால் போதும் சிறிய செடிகள் வளர்ந்து மலர்கள் பூத்துக்குலுங்க தொடங்கிவிடும்.
முழுவதும் மறு சுழற்சி செய்யப்பட்ட காகிதத்தால் தயாரிக்கப்படும் இந்த செய்தித்தாளில் மலர்ச்செடிகளின் விதைகள் உட்பட பல செடிகளின் விதைகள் புதிய தொழில்நுட்பம் மூலமாக கலந்து தயாரிக்கப்பட்டு பின்பு அச்சிற்கு செல்கிறது.
மைகளில் உள்ள ரசாயனங்களால் கூட செடிகளின் வளர்ச்சி தடைபடக்கூடாது என்பதற்காக முழுக்க முழுக்க காய்கறிகள் மற்றும் பழங்களில் இருந்து பெறப்பட்ட சாயங்களை கொண்டே செய்தித்தாள் அச்சிடப்படுகிறது.காய்கறிகள் மற்றும் பழங்களின் சாறு சுற்றுச்சூழலையும் மாசு படுத்தாமலிருப்பதோடு மட்டுமின்றி செடிகள் வளர இயற்கை உரமாகவும் பயன்படுகின்றது இதனால் செடிகளும் செழித்து வளர்கின்றன.
ஜப்பானில் உள்ள பள்ளிகளுக்காக அச்சடிக்கப்படும் இந்த நாளிதழ்கள் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு மறுசுழற்சியின் அவசியத்தையும்,இயற்கை வளத்தை காப்பது பற்றியும்,மரம் வளர்ப்பதின் அவசியத்தை உணர்த்தவும் பயன்படுகின்றன.
பள்ளியில் பயிலும் மாணவர்கள் நாளிதழ்களை ஆர்வத்தோடு படிப்பதோடு மட்டுமில்லாமல் அதன் பின்பு நாளிதழை மண்ணில் வைத்து செடிகளாக மாற்றுகின்றனர்.இந்த புதிய முயற்சியின் மூலமாக குழந்தைகளின் வாசிப்பு பழக்கம் மேம்படுவதோடு சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுகிறது.
இப்படி அச்சடிக்கப்பட்ட செய்தித்தாள் ஒரு நாளில் 4 மில்லியன் பிரதிகள் விற்றதோடு மட்டுமில்லாமல் $700,000 டாலர்கள் வருமானத்தையும் மைனிச்சி நிறுவனம் பெற்றது.
காலையில் தினசரி நாளிதழில் தொடங்கும் காகிதப் பயன்பாடு என்பது நமது அன்றாட வாழ்க்கையில் ஒரு வகையில் தவிர்க்கமுடியாத ஒன்றாகவே இருக்கிறது,காகிதம் என்றாலும் அது மக்குவதற்கு 2 வாரத்திற்கு மேல் ஆகும் மறுசுழற்சி செய்வது எளிது என்றாலும் அதில் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை இதுபோன்ற தொழில்நுட்பங்கள் குறைக்கலாம்.
ஜப்பானியர்களின் இந்த தொழில்நுட்பம் காகிதம் மக்கும் காலத்தை குறைப்பதோடு மட்டுமில்லாமல் குழந்தைகளுக்கு சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. ஒரிகாமி கொக்குகள் செய்வது அவர்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஒன்று. இனிமேல் ஒரிகாமி கொக்குகள் செய்யும்போது அவைகள் பறக்க சிறிய காட்டையும் உருவாக்கிவிடுவார்கள் ஜப்பானியர்கள்.
டெக்னாலஜியை இப்படி சுற்றுசூழலுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் பாதிப்பில்லாமல் மனிதர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த பயன்படுத்துவதுதான் உண்மையான வளர்ச்சி.
வாழ்த்துக்கள் ஜப்பானியர்களின் சாதனைக்கு.