மணிரத்னத்தின் உதவியாளர் தனா இயக்கிவரும் படம் ‘படைவீரன்’. விஜய் யேசுதாஸ் ஹீரோவாக நடிக்க, அம்ரிதா ஹீரோயினாக நடிக்கிறார். இயக்குநர் பாரதிராஜா, முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அம்ரிதா, சென்னையில் பிறந்து, பெங்களூரில் வளர்ந்தவர். அங்கேயே வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது குறும்படங்களில் நடிக்கும் வாய்ப்பு வர, அதைப் பயன்படுத்திக் கொண்டார். இவர் நடித்த குறும்படத்தைப் பார்த்துதான் இவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குநர்.
பெங்களூரில் வளர்ந்தாலும், தமிழை இன்னும் மறக்கவில்லை இவர். சொந்தக் குரலில் தானே டப்பிங் பேசும் இவர், படத்தில் பாவாடை, தாவணி அணிந்து கிராமத்துப் பெண்ணாக நடித்திருக்கிறார். “அப்படி நடிப்பது எளிதாகத்தான் இருக்கிறது. ஆனால், இந்த தேனி மாவட்ட உச்சரிப்புகள்தான் சரியாக வரவில்லை. இயக்குநர் தான் அதற்கு உதவி செய்தார். விஜய் யேசுதாஸ், நல்ல பிரெண்டாக பழகுகிறார். ஆரம்பத்தில் நெர்வஸாக இருந்தபோது நிறைய உதவிகள் செய்தார்” என்கிறார் அம்ரிதா.