சற்றுமுன்

கடவுளைக் காணத் தேவைப்படும் கண்ணாடிகள்!!!


ஒரு பெரியவர் அரசமரத்தின் கீழ் அமர்ந்து கடவுளைத் தியானித்துக் கொண்டிருந்தார். அங்கே ஒரு மாணவன் சென்றான். அம்மாணவன் மிடுக்கும், சொல் துடுக்கும் உடையவனாகக் காட்சியளித்தான்.
"ஐயா! பெரியவரே! ஏன் உட்கார்ந்து கொண்டே தூங்குகின்றீர்? சுகமாகப் படுத்து உறங்கும்'' என்றான்.

"தம்பீ! நான் உறங்கவில்லை. கடவுளைத் தியானிக்கிறேன்.''
"ஓ! கடவுள் என்று ஒன்று உண்டா? ஐயா!
நான் எம்.ஏ. படித்தவன். நான் மூடன் அல்லன். நூலறிவு படைத்தவன். கடவுள் கடவுள் என்று கூறுவது மூடத்தனம். கடவுளை நீர் கண்ணால் கண்டிருக்கின்றீரா?''

"தம்பீ, காண முயலுகின்றேன்.''
"கடவுளைக் கையால் தீண்டியிருக்கின்றீரா?''
"இல்லை.'' "கடவுள் மீது வீசும் மணத்தை மூக்கால் முகர்ந்திருக்கின்றீரா?'' "இல்லை.''

"ஐயா! என்ன இது மூட நம்பிக்கை? உம்மை அறிவற்றவர் என்று கூறுவதில் என்ன தடை? கடவுளைக் கண்ணால் கண்டீரில்லை, மூக்கால் முகர்ந்தீரில்லை; கையால் தொட்டீரில்லை; காதால் கேட்டீரில்லை; இல்லாதவொன்றை இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு அரிய நேரத்தை வீணடிக்கிறீரே? உம்மைக் கண்டு நான் பரிதாபப் படுகிறேன். உமக்கு வயது முதிர்ந்தும் மதிநலம் முதிரவில்லையே? பாவம்! உம்போன்றவர்களைக் காட்சிச் சாலையில் வைக்க வேண்டும். கடவுள் என்றீரே? அது கறுப்பா, சிவப்பா?''

"அது சரி, தம்பீ! உன் சட்டைப் பையில் என்ன இருக்கின்றது?'' "தேன் பாட்டில்.'' "தேன் இனிக்குமா, கசக்குமா?'

"என்ன ஐயா! இதுகூட உமக்குத் தெரியாதா? சுத்த மக்குப் பிண்டமாக இருக்கின்றீர். உலகமெல்லாம் உணர்ந்த தேனை இனிக்குமா கசக்குமா என்று வினாவுகின்றீரே, உணவுப் பொருள்களிலேயே தேன் தலைமை பூண்டது. இது அருந்தேன். இதை அருந்தேன் என்று எவன் கூறுவான்? அதற்காக இருந்தேன் என்பான். தேன் தித்திக்கும். இதை எத்திக்கும் ஒப்புக் கொள்ளும்.'' "தம்பீ! தித்திக்கும் என்றனையே, அந்த இனிப்பு கறுப்பா, சிவப்பா! சற்று விளக்கமாக விளம்பு, நீ நல்ல அறிஞன்.'' மாணவன் திகைத்தான். தித்திப்பு என்ற ஒன்று கறுப்பா சிவப்பா என்றால், இந்தக் கேள்விக்கு என்ன விடை கூறுவது என்று திக்கித் திணறினான்.
"ஐயா! தேனின் இனிமையை எப்படி இயம்புவது? இதைக் கண்டவனுக்குத் தெரியாது! உண்டவனே உணர்வான்.''

பெரியவர் புன்முறுவல் பூத்தார். "அப்பா! இந்தப் பௌதிகப் பொருளாக, ஜடவஸ்துவாகவுள்ள தேனின் இனிமையையே உரைக்க முடியாது, உண்டவனே உணர்வான் என்கின்றனையே? ஞானப் பொருளாக, அநுபவவஸ்துவாக விளங்கும் இறைவனை அநுபவத்தால் தான் உணர்தல் வேண்டும்.

"தேனுக்குள் இன்பம் கறுப்போ? சிவப்போ?
வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்!
தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல்
ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!''
என்கிறார் பரம ஞானியாகிய திருமூலர்.
மாணவன் வாய் சிறிது அடங்கியது. "பெரியவரே! எனக்குப் பசிக்கிறது. சாப்பிட்டு விட்டு வந்து உம்முடன் உரையாடுவேன்.''
"தம்பீ! சற்று நில். பசி என்றனையே, அதைக் கண்ணால் கண்டிருக்கின்றனையா?'' "இல்லை.''

"என்ன தம்பீ! உன்னை அறிஞன் என்று நீயே கூறிக் கொள்கிறாய். பசியைக் கண்ணால் கண்டாயில்லை, மூக்கால் முகர்ந்தாயில்லை; கையால் தொட்டாயில்லை; அப்படியிருக்க அதை எப்படி நம்புவது? பசி பசி என்று உரைத்து உலகத்தை ஏமாற்றுகின்றாய். பசி என்று ஒன்று கிடையவே கிடையாது. இது சுத்தப்பொய். பசி என்று ஒன்று இருக்கிறது என்று கூறுபவன் முட்டாள். உனக்கு இப்போது புரிகின்றதா? பசி என்ற ஒன்று அநுபவப் பொருள். அது கண்ணால் காணக் கூடியதன்று. அதுபோல்தான் கடவுளும் அநுபவப் பொருள். அதைத் தவஞ் செய்து மெய்யுணர்வினால் உணர்தல் வேண்டும்.'' மாணவன் உடம்பு வேர்த்தது, தலை சுற்றியது. பெரியவர் கூறுவதில் உண்மை உள்ளது என்பதை உணர்ந்தான்.

"என் அறியாமையை உணர்கின்றேன். இருந்தாலும் ஒரு சந்தேகம், கடவுளைக் கண்ணால் காண முடியுமா?'' "உன் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் ஒரு கேள்வி, தம்பீ! இந்த உடம்பை நீ கண்ணால் பார்க்கின்றாயா?'' "என்ன ஐயா! என்னைச் சுத்த மடையன் என்றா கருதுகின்றீர்? எனக்கென்ன கண் இல்லையா? இந்த உடம்பை எத்தனையோ காலமாகப் பார்த்து வருகிறேன்.''

"தம்பீ! நான் உன்னை மூடன் என்று ஒருபோதும் கருதமாட்டேன். நீ அறிஞன்தான். ஆனால் அறிவில் விளக்கந்தான் இல்லை. கண் இருந்தால் மட்டும் போதாது. கண்ணில் ஒளியிருக்க வேண்டும். காது இருந்தால் மட்டும் போதுமா? காது ஒலி கேட்பதாக அமைய வேண்டும். அறிவு இருந்தால் மட்டும் போதாது. அதில் நுட்பமும் திட்பமும் அமைந்திருத்தல் வேண்டும். உடம்பை நீ பார்க்கின்றாய். இந்த உடம்பு முழுவதும் உனக்குத் தெரிகின்றதா?''
"ஆம். நன்றாகத் தெரிகின்றது.'' "அப்பா! அவசரப்படாதே. எல்லாம் தெரிகின்றதா?'' "என்ன ஐயா! தெரிகின்றது, தெரிகின்றது என்று எத்தனை முறை கூறுவது? எல்லாந்தான் தெரிகின்றது?'' "அப்பா! எல்லா அங்கங்களும் தெரிகின்றனவா?''

"ஆம்! தெரிகின்றன.'' "முழுவதும் தெரிகின்றதா?'' அவன் சற்று எரிச்சலுடன் உரத்த குரலில் "முழுவதும் தெரிகின்றது'' என்றான்.

"தம்பீ! உடம்பின் பின்புறம் தெரிகின்றதா?'' மாணவன் விழித்தான்.
"ஐயா! பின்புறம் தெரியவில்லை.'' "என்ன தம்பீ! முதலில் தெரிகின்றது தெரிகின்றது என்று பன்முறை பகர்ந்தாய். பின்னே பின்புறம் தெரியவில்லை என்கின்றாய். நல்லது, முன்புறம் முழுவதுமாவது தெரிகின்றதா?''
"முன்புறம் முழுவதும் தெரிகின்றதே.'' "அப்பா! அவசரங்கூடாது. முன்புறம் எல்லாப் பகுதிகளையும் காண்கின்றனையோ? நிதானித்துக் கூறு....''
"எல்லாப் பகுதிகளையும் காண்கின்றேன். எல்லாம் தெரிகின்றது.'' "தம்பீ! இன்னும் ஒருமுறை சொல். எல்லாம் தெரிகின்றதா? நன்கு சிந்தனை செய்து சொல்.''

"ஆம்! நன்றாகச் சிந்தித்தே சொல்கின்றேன். முன்புறம் எல்லாம் தெரிகின்றது.'' "தம்பீ! முன்புறத்தின் முக்கியமான முகம் தெரிகின்றா?
மாணவன் துணுக்குற்றான். நெருப்பை மிதித்தவன் போல் துள்ளினான். தன் அறியாமையை உன்னி உன்னி வருந்தலானான். தணிந்த குரலில் பணிந்த உடம்புடன், "ஐயனே! முகம் தெரியவில்லை!'' என்றான்.
"குழந்தாய்! இந்த ஊன உடம்பில் பின்புறம் முழுதும் தெரியவில்லை. முகம் தெரியவில்லை. நீ இந்த உடம்பில் சிறிதுதான் கண்டனை. கண்டேன் கண்டேன் என்று பிதற்றுகின்றாய். அன்பனே! இந்த உடம்பு முழுவதும் தெரிய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும், சொல்.'' "ஐயனே! இருநிலைக் கண்ணாடிகளின் இடையே நின்றால் உடம்பு இருபுறங்களும் தெரியும்.''
"தம்பீ! இந்த ஊன் உடம்பை முழுவதும் காண்பதற்கு இருநிலைக் கண்ணாடிகள் தேவைப்படுவதுபோல், ஞானமே வடிவாய் உள்ள கடவுளைக் காண்பதற்கும் இரு கண்ணாடிகள் வேண்டும்.'' "ஐயனே! அந்தக் கண்ணாடிகள் எந்தக் கடையில் விற்கின்றன? சொல்லுங்கள். இப்போதே வாங்கி வருகின்றேன். பெல்ஜியத்தில் செய்த கண்ணாடியா?''
"அப்பனே! அவை பெல்ஜியத்தில் செய்ததன்று. வேதாகமத்தில் விளைந்தவை. ஞானமூர்த்தியைக் காண இருநிலைக் கண்ணாடிகள் வேண்டும். ஒரு கண்ணாடி திருவருள், மற்றொன்று குருவருள். இந்தத் திருவருள் குருவருள் என்ற இரு கண்ணாடிகளின் துணையால் ஞானமே வடிவான இறைவனைக் காணலாம்.

"தம்பீ! திருவருள் எங்கும் நிறைந்திருப்பினும் அதனை குருவருள் மூலமே பெற வேண்டும். திருவருளும் குருவருளும் இறைவனைக் காண இன்றியமையாதவை.'' என்று முடித்தார்.

Glasses needed to see God !!!One elder was sitting under the royal court and meditating on God. There a student went there. Mammanu is smiling and smiling. "Sir, why are you sleeping and sleeping?"

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.