சற்றுமுன்

மாட்டிறைச்சி தடையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் ஸ்டாலின்

இன்று ஸ்டாலின் வெளியிட்ட செய்தி அறிக்கை : நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை சந்தைகளில் விற்பதற்கு ஒட்டுமொத்தமாக மத்திய அரசு தடை விதித்துள்ளதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.


மிருகவதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்தத் தடையின் மூலமாக மதச் சுதந்திரம், தனிமனித சுதந்திரம் நாட்டின் மதச்சார்பற்ற தன்மை, அரசியல் சட்டத்தால் அளிக்கப்பட்டுள்ள உரிமைகள் எல்லாவற்றையும் மறுக்கும் விதத்தில் ஒரு “அறிவிக்கையை” மத்திய அரசே வெளியிடுவது “நல்லாட்சியின்” இலக்கணம் அல்ல என்பதை மத்திய அரசுக்கு தலைமை தாங்கும் பா.ஜ.க. உணர வேண்டும்.

“நாடு முழுவதும் மாட்டிறைச்சிக்கு மாடுகள் பயன்படுத்தப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும்” என்று ஜனவரி மாதம் டெல்லியைச் சேர்ந்த வினித் சகாய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடர்ந்து, அதில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வே அந்த பொது நல வழக்கைத் தள்ளுபடி செய்து விட்ட நிலையில், மத்திய அரசே இப்படியொரு அறிவிக்கையை வெளியிட்டு சிறுபான்மையின மக்கள், விவசாயிகள்- குறிப்பாக ஏழை விவசாயிகள் போன்றோரின் உரிமைகளைப் பறித்திருப்பது நாட்டின் மதச்சார்பற்ற முகத்தை மாற்றும் முயற்சியாகவே இருக்கிறது.

மாநில அரசுகளின் அதிகாரங்களை பறிக்கும் இன்னொரு நடவடிக்கையாகவே இந்த அறிவிக்கையைக் கருத வேண்டியதிருக்கிறது. “மாடுகள்” மாநில அரசு சட்டம் இயற்றும் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. அதே போல் மிருக வதை தடுப்புச் சட்டம் மத்திய- மாநில அரசுகள் இரண்டும் சட்டம் இயற்றும் “பொதுப்பட்டியலில் ” உள்ளது. ஆனால் ஜல்லிக்கட்டில் துவங்கி மாட்டு இறைச்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை வரை “மாநிலப் பட்டியல்” மற்றும் “பொதுப்பட்டியல்” இரண்டிலும் மாநில அரசுரக்கு இருக்கும் அதிகாரத்தை பறிக்கும் அடாவடி அரசியலை தொடர்ந்து மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு செய்து வருகிறது. இது “கூட்டுறவு கூட்டாட்சி” தத்துவத்திலோ, “மத்திய- மாநில உறவுகளிலோ” பா.ஜ.க.விற்கு நம்பிக்கையில்லை என்பதை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது. இது போன்ற தொடர் நடவடிக்கைகள் காலப்போக்கில் “மாநில பட்டியலோ” “பொதுப்பட்டியலோ” எந்தப் பட்டியலின் படியும் மாநில அரசுகளுக்கு சட்டமியற்றும் உரிமை இல்லை என்பதுதான் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசின் சிந்தனையா என்று கேள்வி எழுப்ப விரும்புகிறேன்.

ஆகவே நாட்டின் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கும் விதமாக நாடு முழுவதும் மாட்டிறைச்சிக்காக விதிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த தடையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், உணவு என்பதில் நீண்ட காலமாக மக்களுக்குள்ள அடிப்படை விருப்புரிமையைத் தடுத்திடக் கூடாதென்றும்,அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சமான மதச் சார்பற்ற தன்மையை அடியோடு அசைத்துப் பார்க்கும் நடவடிக்கைகளில் மத்தியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்றார் .

The central government should withdraw the entire ban imposed on beef across the country in order to protect the country's diversity stalin statement

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.