சுறுசுறுப்பானகாலைப்பொழுதொன்று!
ஆதவனின்உக்கிர நகைப்பைச்சிறிதும் பொருட்படுத்தாத அந்நகரம், சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது!
அன்றுநல்ல மூகூர்த்தநாளும்கூட! நகரத்தின் மையத்திலிருந்தஅத்திருமண மண்டபத்தை நோக்கி விருந்தினர் சென்ற வண்ணமிருந்தனர்.
குதூகலம் தரும் திரையிசை மிதமான ஒலியில் தவழ, அவற்றோடு போட்டிபோட்டது அம்மண்டபத்தை நிறைத்திருந்தவர்களின் ஆரவாரப் பேச்சொலி!
சர்ரென்று வந்து நின்ற காரிலிருந்து இறங்கிக்கொண்ட மலர், பின்புறமிருந்து தங்கையும் மகள்களும் இறங்கியதும்,
“கல்யாணம் முடிந்ததும் கால் பண்ணுகிறேன் ஐயா! ஏதோ வேலைஇருக்கென்று சொன்னீங்களே; முடித்துவிட்டு வாங்க!” ஓட்டுனரிடம் கூறியவர்,அவர் புறப்பட்டுச் செல்ல, தங்கையோடு இணைந்து மண்டபத்தை நோக்கி நடக்கத் தொடங்கினார்.
அக்கா, தங்கை இருவர்விழிகளுமே, முன்னே சென்று கொண்டிருந்த தத்தம் மகள்களில் வாஞ்சையுடன்படிந்திருந்தன!
மலரின்ஒரே மகள், மருத்துவம் இரண்டாம் வருடத்தில் படிக்கும் அனு;நல்லஅழகி! அம்மாவில் உயிரானவள்!
வேதாவின் ஒரே செல்ல மகள், ஒன்பது வயதேயான ப்ரீத்தி; பார்த்தவுடன் கட்டிக் கொள்ளத் தோன்றும் சுட்டிப் பெண்! துறுதுறுவென்ற அழகிய இளம் மொட்டு! எந்நேரமும் ஓயாத பேச்சும், வற்றாதகிண்கிணிச் சிரிப்பும் சின்னஞ்சிறு வயதிலிருந்தே அவளோடு ஒட்டிக் கொண்டிருப்பது!
அக்கா,அழகிய டிசைனர் சேலையிலும், குட்டித் தங்கை சரசரக்கும் பட்டுப் பாவாடையிலும் கலகலத்துக்கொண்டே சென்று கொண்டிருக்க, இரசித்துக்கொண்டே நடந்த வேதா, சட்டென்று தமக்கையைப் பார்த்தவள், தமக்கை தன்னைப் பார்க்கும் முன் தலையைத் திருப்பிக் கொண்டாள்.
அதேவேகத்தில், விழிகளில் மின்னி மறைந்த அடங்கா வேதனையை, திரைபோட்டு மறைத்துக்கொண்டாள்!
நெருங்கிய உறவினர் வீட்டு திருமணமென்பதால் உள்ளே நுழைந்ததும் குறைவற்றமுகமன், நலவிசாரிப்புகள்!
இன்முகத்தோடு உரையாடிய பின்,ஓரமாக இருந்த மேசையில் நால்வரும் அமர்ந்துகொண்டனர்.
வரவேற்பாக வந்த குளிர்பாணத்தை உறிஞ்சிக்கொண்டே தன் பக்கவாட்டில் திரும்பிய வேதா, முகத்தில் திடுக்கிடலைப் பூசிக் கொண்டாள்!
“பெரியக்கா!அப்படியே வலப்பக்கம் திரும்பிப் பாருங்க; உங்க மாமி...உங்களையே முறைத்துக் கொண்டிருக்கிறார்!” என்றவள் மனதில், கலவரம் தான் மூண்டது!
‘ஊரிலிருந்து எப்போது வந்தார் இவர்?. இப்போது வாயைத் திறந்தால், கல்யாண வீட்டில் அனைவரது பார்வையும் மாப்பிள்ளை பெண்ணை விட்டுவிட்டு எங்களையல்லவா மொய்க்கும்!’ வேதாவின் மனதில் புலம்பல் களைகட்டியது!
தங்கை கண் காட்டிய திக்கில் திரும்பிப்பார்த்த மலர், மாமியாரின் வெறுப்புக் கலந்த நெருப்புப் பார்வையை தயங்காது வாங்கிக்கொண்டே, அடுத்து வந்த சிற்றுண்டித் தட்டிலிருந்தவற்றைச் சுவைப்பதில் முனைந்தார்.
தன் அப்பம்மாவைக் கண்ட அனுவோ, அவரோடு போய்க் கதைக்கும் எண்ணமின்றி தங்கையோடு இரகசியம் பேசி கொண்டிருந்தாள்.
சற்று நேரத்தில், இதுவரை மலரின் மாமியாரருகில் அமர்ந்திருந்த இரு உறவுக்காரப்பெண்கள், முகமெல்லாம் முறுவலாக இவர்களருகில் வந்தமர்ந்தனர்!
“எப்படி இருக்கிறாய் மலர்? பார்த்து நாளாச்சு!”
“நல்லா இருக்கிறோம்கா! நீங்க எப்படி இருக்கிறீங்க?”
“எனக்கென்ன! ஆண்டவன் புண்ணியத்தில் அமோகமாக இருக்கிறேன்!” என்றவர் பார்வை,ஒளிவு மறைவின்றி மலரை அளவிட்டது!
“அழகான சாரி!... என்ன விலைக்கு வாங்கினாய்? புதிதா? இல்லை முதல் கட்டியதா?”
“புதிதுதான்கா! பத்தாயிரம்.”
“ஓ!... பார்த்தால் தெரியுது!” சொன்னவர் பார்வை, தன்னோடு வந்தமர்ந்த பெண்மணியை அர்த்தத்தோடு சந்தித்து மீண்டது!
“அதுசரி,உன் புருசனுக்கு இப்போ எப்படியிருக்கு! வீட்டுக்குவரவேண்டும் என்றுதான் நினைப்பேன்! எங்கே, நேரமா கிடைக்குது!”
“இதிலென்ன இருக்கக்கா! இப்படிக் காணும் போது நலம் விசாரிப்பதே போதும்!” அளவாக முறுவலித்தார் மலர்.
“அப்போ, இதோடு நிறுத்திக்கொள்; வீடுவரை வந்துவிடாதே என்றா சொல்கிறாய்?” இடக்காகக் கேட்டார் இரண்டாவது பெண்மணி.
“நான் அப்படிச் சொல்லவில்லை;வீடு வரை வந்து பார்க்கவில்லையே என்று வருந்துவது போலச் சொன்னதால் சொன்னேன்!” மலரின் குரலில் வந்திருந்த இறுக்கம் முகத்தில் பரவியது!
“இந்தக் காலத்தில் அவரவர் வேலையைப் பார்க்கவே நேரமில்லை; இதில் அடுத்தவன் வீட்டு விடயம் பார்க்கவா நேரமிருக்கும்! நான் சொல்வது சரிதானேக்கா!” வந்ததும் பேச்சை ஆரம்பித்த பெண்மணியை நேராகப் பார்த்தார் மலர்.
சட்டென்று முகம் கறுத்தாலும் சமாளித்துக் கொண்டவரோ, “ஆங்! அதுவும் சரிதான்!” என்றவர்,
‘திமிர் படித்தவள்! அதுதான் புருஷனை படுக்கையில் போட்டுவிட்டு இப்படி மினுக்கிக் கொண்டு திரிகிறாள்!. கடவுளும் எல்லோருக்கும் அளந்துதான் கொடுப்பார் போலும்! கண்ணுக்கு நிறைவான, கைநிறைய சம்பாதித்த புருஷனும் சுகதேகியாக இருந்திருந்தால், இவளைப் பிடிக்கவே முடியாது!’ காரணமற்ற எரிச்சலில் மனதில் கறுவிக் கொண்டார்.
“சரி, அதை விடு; உன் புருஷனுக்கு எப்படி இருக்கென்று சொல்லு?. டாக்டர் என்ன சொல்கிறார்?” என பேச்சை ஆரம்பித்த பெண்மணி, இலகுவில் பின்வாங்க விரும்பவில்லை!
“ஹ்ம்ம்.. அவர் அப்படியே தான் இருக்கிறார்! டாக்டர்கள் சுகம் வரும் என்றுதானே சொல்வார்கள்! சுகமாகும்போது கண்டுகொள்ள வேண்டியதுதான்!” மலரின் குரலில் அப்பட்டமான சலிப்பு!
எப்போதுமே, மனதைத் துல்லியமாக வெளிக்காட்டும் குரலும் முகமும் மலருக்கு!
“நீ துணிந்தவள் மலர்! புருஷனுக்கு இப்படி முடியாமல் வந்த பின்னும் கொஞ்சமும் முடங்கிப் போகவில்லை! அதுமட்டுமா?.. அதை மறந்து, ஒதுக்கி, இயல்பாக அன்றாட வாழ்கையைச் சமாளிக்கிறாய்!” ஏகத்துக்கும் வியந்தார் இரண்டாவது பெண்மணி .
பாராட்டுப் போலிருந்தாலும் அதன் பின்னால் இருந்த எள்ளல் புரியாதவரா மலர்!
சட்டென்று மலரின் மனதில் வந்து போன விரக்தியை அடித்து விரட்டியது அவரில் ஆதிக்கம் செலுத்தும் வன்மம்!
ஆமாம், வன்மமேதான்! ஏன், ஒருவகை வெறியுணர்வு என்றும் சொல்லலாம்!
அமைதியாக அவரைப் பார்த்தார்!
கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன பேச்சுக்கள் இவை! அவரை எதுவுமே செய்யாதே!
முதல் இவையெல்லாம் அவர் வாழ்வில் தூசலல்வா?
“உன்னைப் போல் நிலையில் நான் இருந்திருந்தால், நினைத்தால் நெஞ்சேவெடித்துவிடும் போலிருக்கு மலர்! ஹப்பா! நம்மால் முடியுதுடா சாமி!” தொடர்ந்தார் முதல் பெண்மணி.
இதழில் உதித்த அமைதியான மென்முறுவலுடன், அருகிலிருந்த தங்கையின் விழிகளைத் தொட்டு மீண்டன மலரின் விழிகள்!
“உண்மையைச் சொன்னால்,உன்னைப் போலத்தான் பெண்கள் இருக்கவேண்டும் மலர்! வருத்தக்காரப் புருஷனை கட்டிப் பிடித்துக்கொண்டு, கண்ணைக் கசக்கிக் கொண்டிருந்தால் நம் வாழ்கையை யார் பார்ப்பது! வாழும் காலத்தில்சந்தோசமாக வாழவேண்டாமா? இந்த வயதில் நன்றாக உடுத்தி நாலு இடத்துக்குப் போய்வந்தென்று சந்தோஷமாக வாழாமல், கிழவியானபின்னா அனுபவிப்பது!” முதலாவது பெண்மணியின் ஊக்கமருந்தான பாராட்டுப் பத்திரம்!
‘ஏய்மனிஷி, இப்போது உனக்கு என்னதான் பிரச்சனை?’ நாக்கில் துருத்தி நின்ற வார்த்தைகளை கடினப்பட்டு விழுங்கினாள் மலரின் மகள் அனு.
இப்படியான பேச்சுக்களைச் சந்திக்கையில் அவளின் இள உள்ளம் கொதித்தாலும், அவற்றையெல்லாம் முறுவலோடு இலாவகமாக எதிர்கொள்ளும் தன் அன்னையின் தைரியம் அறியாதவளல்லவே அவள்!
ஆனாலும், அவளுக்கு அவ்விடத்தில் இருக்கவே பிடிக்கவில்லை!
இள உள்ளம் தணலாகக் கொந்தளிக்கத் தொடங்கியது!
‘பலி ஓரிடம் பாவம் ஓரிடமா?’ வாய்விட்டுக் கத்தத் தோன்றியவளின் பார்வை, ஓயாது பேசிக் கொண்டிருந்த தன்குட்டித் தங்கையில் ஆதுரத்தோடு படிய, மறுகணம், தன் தளிர்க்கரம் கொண்டு தங்கையை வளைத்துக் கொண்டாள், பாதுகாப்பாய்!
“சரியாச் சொன்னீங்கக்கா! என் எண்ணமும் அதுதான்.அவருக்கு முடியாது போய்விட்டது.நான்கு வருடங்களாக எந்த முன்னேற்றமும் இல்லாமல் கைகால் இழுத்தபடி படுத்த படுக்கையாகக் கிடக்கிறார்.
அதைப் பார்த்து, மூக்கை உறிஞ்சிக்கொண்டு நானும் மூலையில் முடங்கினால் சரியா? அல்லது கண்ணீரில் கரைந்தால் எழுந்துவிடுவாரா?
என் ஒரே மகளுக்கு நல்லபடி வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டுமா இல்லையா சொல்லுங்க!” தீவிரமாக வினவிய மலரை, ஒரு கணம் உற்று நோக்கிய பெண்மணிகள் இருவரும் சட்டென்று பாதையை மாற்றினர்.
“நீ சொல்வது சரிதான் மலர்! என்னதான் என்றாலும் பெற்ற மகனைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை தாய்க்கு இருக்காதா சொல்லு பார்ப்போம்! உன் மாமியாரோடு சண்டைப்போட்டு வீட்டுப் பக்கம் வரவேண்டாம் என்று சொல்லிவிட்டாயாமே! உன் புருஷனின் சொந்த பந்தங்களை ஒதுக்கிவிட்டாயாமே!.வயது போன காலத்தில் அவருக்கு எவ்வளவு மனவருத்தம்! மகனுக்கு முடியவில்லை என்பதோடு, மகனைப் பார்க்கவும் முடியவில்லை என்றால்!” முதல் பெண்மணி சற்று மூச்சு விட நிறுத்தினார்.
“இப்போ என்ன, உன்னோடு நிரந்தரமாக வந்திருக்கவா கேட்கிறார்! இல்லையே!அப்பப்போ வந்து, நாலு நாட்கள் நின்றார் இல்லை; சமாதானமாகப் போ மலர்!” இரண்டாவது பெண்மணி தொடர்ந்தார்.
“சும்மா வந்து பார்த்துவிட்டுப் போகவேண்டாம் என்று யார் சொன்னது?!” நெற்றிசுருங்க வினவிய மலரின் முகம் இறுகிவிட்டது!
“வந்து,தன் மகனை அப்படிப் பார்க்கவில்லை, இப்படிச் செய்யவில்லை என்று குறை சொல்லி,ஊரெல்லாம் என்னை வசைபாடிக் கொண்டு திரிந்தால்!. அதனால்தான் வரவேண்டாம் என்றேன்! இப்போதும் சொல்கிறேன், வாயைமூடிக்கொண்டு வந்து பார்த்துவிட்டுச் செல்லட்டும்! இல்லையோ, தன் மகனை தானே கொண்டு போய்வைத்திருந்து ஆசைப்படும் மாதிரி பராமரிக்கட்டும்!. நான்வேண்டாம் என்று சொல்லவே மாட்டேன்!” அழுத்தமாக முடித்தார் மலர்.
‘உன்னைப் போல மருமகள்கள் வாய்த்தால் அந்தவீடு உருப்பட்ட மாதிரித்தான்! பாவிப் பெண்ணே, உனக்கு நரகவாயில்தான்!’ இரண்டு பெண்களுமே மனதில் நொடித்து, சாபமே இட்டார்கள்!
“என்ன வேதா அமைதியாக இருக்கிறாய்! எங்கே உன் புருஷன் வரவில்லையா?” முதல் பெண்மணி சற்று வழிமாறி, பேச்சைத் தொடர்ந்தார்.
“வேலைவிடயமாக ஊருக்குப் போயிருக்கிறார் அக்கா!”
“அதுசரி! எல்லோரும் ஆணும் பெண்ணும் வேலைசெய்தால் தான் நன்றாகச் சீவிக்கலாம் என்று நாயாய் பேயாய் ஓடித் திரிய, நீ படித்து முடித்து, கிடைத்த நர்ஸ் வேலையையும் விட்டுவிட்டு, ஒத்தப் பிள்ளையைக் கட்டிப்பிடித்துக் கொண்டு திரிந்தால், புருஷன்காரன் தான் சுமைதாங்கி போல ஓடவேண்டும்! நல்லநாள் பெருநாள் என்று பார்க்க முடியுமா?. விஷேசங்களில் தலைகாட்டமுடியுமா சொல்லு பார்ப்போம்!” என்ற பெண்கள், அவர்கள் பதில்சொல்ல முன் முந்திக்கொண்டு,
“சரி இருங்க, அதோ ராதா வந்திருக்கிறாள்;கதைத்துவிட்டு வருகிறோம்!” அவ்விடம் விட்டகன்றனர்.
ஒரு இறுக்கமான அமைதி நிலவியது அவ்விடத்தில்!
வேதாவின் மனதிலோ, அடக்க நினைத்தாலும் அடங்க மறுத்து அனலாக தகிக்கும் நினைவுகள் பீறிட்டெழுந்து, அவளையே சுட்டுப் பொசுக்கிச் சுகம் கண்டது!
“பளார் பளார்! பளார் பளார்!” விடாது மாறிமாறி விளாசித் தள்ளிய வயோதிபக்கரம் துவண்டு கீழே சாய, துவளாது ஆவேசத்தோடு நின்றார் சுப்பையா!
அடிவாங்கிய வேதனையை உணராது பித்துப் பிடித்து அமர்ந்திருந்தாள் வேதா!
கொஞ்சம் தள்ளி அமர்ந்திருந்தான் வேதாவின் காதல் கணவன்!
மனைவியை, அவள் தகப்பன், மாட்டை அடிப்பது போல் அடிப்பதைக் கண்கள் வெறித்தாலும்,அவன் கருத்தில் சற்றும் பதியவில்லை!
பாளம் பாளமாக வெடித்துச் சிதறி, சொட்டச் சொட்ட குருதிவழியும் நெஞ்சின் வேதனையையும் உணராது அமர்ந்திருந்தான் அவன்!
அவன் கரங்களோ, உறக்கத்திலிருந்த தன் ஒரே செல்வமான ஐந்து வயது அழகுக் குவியல் ப்ரீத்தியை,சுற்றி வளைத்து நெஞ்சோடு அணைத்திருந்தன!
“நான்கு பெண்பிள்ளைகளைப் பெத்து வளர்த்து..” ஓவென்று கதறினார் சுப்பையா!
“முதுகொடிய வயல்வேலை செய்து உங்களையெல்லாம் வளர்த்தேன்டி! எதில் குறை வைத்தேன்! சாப்பாட்டில்? உடுபுடவையில்? படிப்பில்? எதில் குறைவைத்தேன்!?” தன் தலையில் மாறிமாறி அறைந்துகொண்டு, அப்படியே தளர்ந்து நிலத்தில் அமர்ந்தார் பெரியவர்.
உள்ளத்தில் கொழுந்து விட்டெரியும் ஆவேச நெருப்பை, நடந்த கொடுமையை ஜீரணிக்கும் திராணியின்றி, பித்துப் பிடித்துப் போயிருக்கும் மகளை அடிப்பதன் மூலம் தணித்துவிட முடியுமா என்ன?
“பத்தாம் வகுப்புக் கூட படித்திராத உன் அம்மா, உங்களுக்கு எதில் குறை வைத்தாள்?. சொல்லுடி,பாவிப் பெண்ணே சொல்லு!”
“தப்பாக ஒருவன் பார்வை உங்க மேல் விழுந்திருக்குமா? ஐயோ! ஐயோ!” கதறியவர், ஆவேசத்தோடு எழுந்து மீண்டும் மகளை போட்டு துவைத்தெடுத்தார்!
தகப்பனின் அத்தனை அடியையும் உணர்ந்து, கதறும் நிலையில் கூட இருக்கவில்லை வேதா; துவண்டு சரிந்தாள்!
“ஒத்தப்பிள்ளை போதும்; அவளுக்கு அதைச் செய்யவேண்டும்; அந்த வசதி, இந்த வசதி, அப்படி இப்படி எத்தனை கனவுகளும்ஆசைகளும்!கடைசியில் இப்படி ஒரு நிலைமையில் கொண்டுவந்து விட்டுவிட்டாயே!” ஆற்றாமையோடு மகளையே குறை சொன்னார்!
“நடந்ததற்கு நாங்கள் எப்படிப் பொறுப்பாவோம்!” என்றோ, “நம்பிக் கெட்டுவிட்டோம் என்றோ!” சமாதானம் தான் சொல்ல முடியுமா?
“நீ ஒரு தாயென்று உயிரோடு இருந்து என்ன பயன்!.சுவர் இருந்தால் தானே சித்திரம் தீட்ட முடியும்!”அரட்டிய பெரியவர், தன் முகத்தில் அறைந்து கொண்டு கதறினார்.
“மகள்களையும் பார்த்துவிட்டு, தோட்டத்துக்கு கொஞ்ச சாமான்கள் வாங்கிக்கொண்டு வருகிறேன்!” என, மனைவியிடம் சொல்லிவிட்டு, பேத்திகளைக் காணும் ஆவலில் எவ்வளவு சந்தோசமாக புறப்பட்டு வந்திருந்தார்! இங்கே நடந்ததோ!
“ஐயோ! மூத்த மகள் புருஷன், மகன் போல என்று நினைத்தேனே!” அரற்றினார்!
“இரவு வேலை செய்துவிட்டு வீட்டில் நிற்கும் பெரியத்தான்தான் குட்டிம்மாவைப் பார்த்துக் கொள்வார்!. அவர்கள் வீட்டுக்கருகில் தானே குட்டிம்மாவின் நேர்சரியும்இருக்கு! நேர்சரி முடிந்ததும் அழைத்துச் சாப்பாடு கொடுத்து பக்குவமாகப் பார்த்துக் கொள்வார்!. நல்ல காலம்,‘டேக்கேர்’அப்படி இப்படித் திரியத் தேவையில்லை; நான் லக்கி!” மகிழ்வோடு காதில் வந்து மோதிய செய்தியில் இவ்வளவு கொடும் விஷமிருந்ததா?
“எப்படிப் பார்த்தான் அந்தக்கயவன்! படித்த,நல்லமனிதன் போர்வைக்குள் ஒளிந்திருக்கும் கொடியமிருகம்!மனித உருவில் நடமாடும் இரத்தக் காட்டேரி!
அவனுக்கும் பதினாறு வயதில் ஒருமகள் இருக்கிறாளே!கண்ணிறைந்த மனைவி குத்துக் கல்லாட்டமாக இருக்கிறாளே! அப்படியிருக்க, பச்சைக் குழந்தையை....ஐயோ! ஐயோ! எப்படி முடிந்தது!” நெஞ்சில் அறைந்து அழுதார் சுப்பையா!
அவ்வீட்டு வரவேற்பறையே, கொடும் விஷக்காற்றைச் சுவாசித்தது போன்ற வேதனையில் மூச்செடுக்கக் கடினப்பட்டுத் துடித்தது!
‘அம்மா நோகுது!” சிறுநீர்கழிக்கச் செல்லும் ஐந்து வயது ப்ரீத்திஅழ,தாதியாகப் பணிபுரியும் அம்மா வேதாவோ, செல்லமாக முறைத்தாள்!
“தண்ணி குடியென்றால் அதுக்கு கள்ளம்! தண்ணி நிறையக் குடித்தால் எல்லாம் மாறிவிடும் குட்டிம்மா!” சொல்லிக்கொண்டே தண்ணியைக் கொடுக்க, கலங்கிக் கொண்டே வாங்கி, கொஞ்சமாகக் குடித்தாள் சிறுமி.
ஆனால், அடுத்தடுத்து மகளின் அழுகை வலுக்க, ‘யூரின் இன்ஃபெக்ஸ்சனோ!’ சந்தேகத்தில் மருத்துவரை நாடினாள் வேதா!
அவரோ, கருங்கல்லைப் பெயர்த்தெடுத்து உச்சந்தலையில் முன்னறிவிப்பின்றிப் போட்டுவிட்டாரே!
“ச்சா...நீ ஒரு நர்ஸ் என்று வெளியில் சொல்லாதே வேதா; வெட்கக் கேடு! உன் மகளை யாரோ பாலியல் ரீதியாக துன்பப்படுத்தியுள்ளார்கள்!” காதில்விழுந்ததை கிரகிக்கவே முடியவில்லை வேதாவால்!
ஆனால், மருத்துவர் இலேசில் விட்டுவிடுவாரா?
சின்னப் பிஞ்சை மாறிமாறி விசாரித்துக் கிடைத்த விடையோ, “பெரியப்பா! பெரியப்பா! பெரியப்பா!”
கொலைவெறி கூத்தாட ஆவேசத்தில் எழுந்தார் சுப்பையா!
“விடமாட்டேன்; அவனை உயிரோடு விடமாட்டேன்!”
வாயிலை நோக்கி நடந்த தகப்பன் காலை கெட்டியாகப் பற்றிக்கொண்ட வேதா கதறி விட்டாள்!
“வேண்...டாம்பா வேண்..டாம்! என் மகள்...வாழ்வே நாசமாகிடும்! வெளி...யில் தெரிகின்றவிடயமா இது?” தீனக்குரலில் கதறினாள்!
உதறிவிட்டு முன்னேறியதந்தையை கையெடுத்துக் கும்பிட்டாள்!
“முதல், அவளுக்கே... என்ன நடந்தது என்று தெரியா...தப்பா! பேசாமல் விட்டு விடுவோம்பா! வேண்...டாம்!”
“என்னங்க! அப்பாவைப் போகவேண்டாம் என்று சொல்லுங்க!” கணவரைப் பார்த்துக் கதறினாள்!
மகளை உதறிய சுப்பையா,வெறி கொண்டு வெளியேறினார்!
அதுவரை மகளைப் பொத்திக்கொண்டு அமர்ந்திருந்த வேதாவின் கணவன், உறங்கிய மகளை அருகிலிருந்த சோஃபாவில் பூப்போபோல கிடத்தியவன், ஒரு கணம், அந்த நிர்மல முகத்தையே பார்த்திருந்தான்!
அடுத்த கணம்,கொலை வெறி தாண்டவமாடும் முகத்தோடு மாமனாரைத் தொடர்ந்தான்!
வேதாவின்,தீன அழுகை ஒலிமட்டும் அந்த ஹாலை நிறைத்திருந்தது!
இரும்புக் கதவு திறக்கப்படும் ‘கிரீச்’ ஒலியில் எட்டிப் பார்த்தாள் மலர்!
“அப்பா வாங்கப்பா! தோட்டச் சாமான்கள் வாங்கியாச்சா? அம்மாவையும் அழைத்து வந்திருக்கலாமே! இர...வே போகப்...போறீங்களா?” ஆவல் மறைந்து நெற்றி சுருங்கியது!
தந்தையின் முகத்தின் கோரத்தில் நெஞ்சம் திடுக்கிட்டது!
‘அது யாரு? வேதா..வின் புருஷன்! ஏனிப்படி வாறார்!?’ மொத்தமும் கலக்கம் ஆட்கொண்டது!
“வாங்க மாமா.. வாங்க!” உள்ளிருந்து, வரவேற்றபடி வந்தான் மலரின் புருஷன்!
அடுத்த நொடி,மதம் பிடித்த யானையாகப் பாய்ந்தார் சுப்பையா! எங்கிருந்துதான் அந்தப் பலம் வந்ததுவோ!
தீமையை, வக்கிரத்தை எதிர்க்க வயது ஒரு தடையா என்ன?
தன் செல்ல மகள் வேதாவை,மனதால் மரணித்துத் துவண்டு கிடந்தவளை விளாசித் தள்ளிவிட்டு வந்திருந்தவர், எரிச்சலில் காந்திய கரங்கள் உடைந்து துண்டாகும் அளவுக்கு வெறி கொண்டு தாக்கினார், மூத்தமருமகன் எனும் கொடும் மிருகத்தை!
“ஐயோ அப்பா! இது என்ன காரியம்?” சட்டென்று பாய்ந்து தடுக்க முயன்ற மலரை,அப்பால் தள்ளிய வேதாவின் கணவன், ஒன்றொன்றாகச் சொல்லிச் சொல்லி அடித்துத் துவைத்தான்!
“சின்னப் பிஞ்சு, உன்னை நம்பி விட்டோமடா!. நீ பெறவில்லை என்றாலும் உன் மகள் அவள்! அவளைப் போய்...”
மூச்சு வாங்க வாங்க அவன் துப்பிய வார்த்தைகள் ஒவ்வொன்றும், காய்ச்சிய கூர் ஈட்டிகளாக, மலரை மட்டுமா பதம் பார்த்தது?. அப்போதுதான் தனியார் வகுப்பு முடிந்து வந்திருந்த அனுவையும் சேர்த்துக்கொண்டதே!
சிந்தனாசக்தி தொலைந்த அதிர்வில், சுவரோடு சுவராக ஒட்டிநின்றாள் மலர்!
மலரத் தொடங்கியிருந்த அனுவின் பூவிதயமோ, அதன் வாசம் தொலைத்தது!
வலுக்கட்டயாமாக யாரோ அதன் இதழ்களைக் களைந்து மூழியாக்கிச் சென்றனர்!
உள்ளேபுகுந்ததுஒருவித ஆவேசம்! வெறி!
குட்டித் தங்கை ப்ரீத்தியின் கிண்கிணிச் சிரிப்பு காதில் ஒலிக்க, அவள் குட்டித்தேவதையாக கண்முன் வர, காலில் மாட்டியிருந்த செருப்பைக் கழட்டிக் கொண்டு பாய்ந்து சென்றவள்,சித்தப்பாவையும் தாத்தாவையும் வெறி கொண்டவள் போல பிடித்திழுத்தாள்!
அவளைக் கண்டதும், இரத்தத்தில் கிடந்த கயவனைவிட்டுவிட்டு நிமிர்ந்தவர்கள்நெஞ்சமோ,அதிர்ந்துதான் போனது!
அவர்கள் திகைத்த அக்கணத்தில், கீழே அவலமாகக் கிடந்த தான் பிறக்கக்காரணமானவனில் காறித் துப்பினாள் அனு!
தன் வேஷம் களையப்பட்ட உச்சகட்ட அதிர்வோடு நைந்து கிடந்தவன், பெற்றமகளின் ருத்ர கோலத்தில், மெல்ல மெல்ல உயிர்பிரியும் வலி உணர்ந்தான்!
அடுத்தநொடி, அக்கணமே அந்த அற்பப்பதரின் உயிரைப் பிய்த்து எறியும் ஆவேசத்தில், செருப்புகிழிந்து போகுமட்டும் அடித்தாள் அனு!
அன்று இழுத்துக்கொண்டு விழுந்தவன் தான்,இதோ இன்றுவரை,படுக்கைக்கும் உலகத்துக்கும் பாரமான ஜடமாக, புத்தி விழித்திருக்க, உடல் சுருங்கிக் கிடக்கிறான்!
விழிகளை இறுகமூடி, வழிந்த சூடான கண்ணீரைச் சட்டென்று கைக் குட்டையால் துடைத்தாள் வேதா!
நினைவுகளின் கனம் தாங்காது, மயக்கம் வரும் போலிருந்தது அவளுக்கு!
இதயமோ, பச்சை இரணமாக வலியில் கதறியது!
‘அந்தக் கயவனுக்காக உற்றமும் சொந்தமும் பெரியக்காவை எவ்வளவு தூற்றுகிறார்கள்! தலையிடியும் காய்ச்சலும் தனக்குத் தனக்கு வந்தால் தான் தெரியும்!’... மனதில் புலம்பிய வேதாவின் கரத்தை, ஆதரவாகப் பற்றினார் அவள் பெரியக்கா மலர்!
திருமணம் முடிந்து வீட்டினுள் நுழைந்த அனு மாடியேற, பின்னறையில் இருந்து வந்த தீனமான ஒலியை காதில் வாங்காது, உடை மாற்றி வந்தார் மலர்.
“ம...ல..ர்...கொ..ஞ்சம்தண்...ணி...தாக.....மாக” தொடர்ந்து, திக்கித் திக்கி வந்த ஈனஸ்வர முனகலில், உள்ளத்தில் கனன்றநெருப்பு கொழுந்து விட்டெரிய, புயல் போல் பின்னறையத் திறந்து நுழைந்தார் மலர்.
மிகமெல்லிய வெளிச்சத்தில், மூலையில் கிடந்த கட்டிலில் நாராகக் கிடந்தான், அவர் புருஷன் என்கிற மஹாமதிப்புக்குரிய பட்டதுக்குரியவன்.
ஒருபக்கக் கரத்தை இலேசாகத் தூக்கி, “அ...தை.. இழு...த்து விடு...மல...ர்.. தண்....ணி”யன்னல் திரையை விலக்கும்படி,கெஞ்சினான்.
விருட்டென்று அவனருகில் விரைந்தவர், “ஏன்? வெளிச்சத்தில் வைத்து இன்னும் எந்தக் குழந்தை வாழ்வில் விளையாடலாம் என்று கற்பனை செய்து பார்க்கப் போகிறாயாடா?
என் பெயரைச் சொல்லாதே என்று சொல்லி இருகிறேன்தானே!. என்ன துணிவிருந்தால் திரும்பவும் சொல்வாய்!”அங்கே, சிறு மேசையிலிருந்த வெற்று நீர்ப் போத்தலை எடுத்து,“சட்! சட்! சட்!” அவன் முகத்தில் அடித்தார்!
“ஆஆஆ...ஆஆ...ஆஆ..” காய்ந்து கிடந்த வாய் கிழிந்து இரத்தம் கசிய, “உன்னைப் பார்க்கும் பெடியன் பின்னேரம் தான் வருவான்; அதுவரை தாகத்தில் கிட! அப்படியும் செத்து விடமாட்டாய்!” வாயிலை நோக்கித் திரும்பி நடந்தவர்,
“லேசில் சாக விட்டுவிடுவேனா! சுவர்க்கம் நரகம் பற்றி எனக்குத் தெரியாது;ஆனால், நான் உனக்கு நரகத்தைக் காட்டிவிட்டே சாகவைப்பேன்!”உறுமியவர், கதவை அடித்துச் சாத்திவிட்டு வெளியேறினார்.
கண்ணீர் வற்ற துவண்டிருந்த கயவன் உள்ளமோ, தொலைதூரத்தில் நின்று, தான் தினம், தினம் அனுபவிக்கும் வேதனையை இரசிக்கும் மரணத்தை நோக்கி, தன் தவத்தையும் ஜெபத்தையும் ஆரம்பித்தான்.
‘மறுதலித்தது போதும், வந்துவிடு! என்னை உன்னோடு அழைத்துச் சென்றுவிடு! மரணமே விரைந்து வா!’ அவன் கதறலை, பெற்ற மகள், காதில் மாட்டிய ‘வாக்மன்’ மூலம் தவிர்த்தது போலவே, மரணமும் மறுதலித்துச் சென்றது!
tamil short story about Disappointment - Rossi Kajan - short story