சற்றுமுன்

மைனா - கார்த்திகேயன் சுகதேவன் - சிறு கதை

   
ஒத்தவாடை தெரு. அதை தாண்டியதும் ஒருக்களித்து படுத்துக் கொண்டது போல் கண்மாய்க்கரை. கரையின் மேலே ஏறாமல் பக்கவாட்டிலேயே நடந்து சென்றால் வருவது மைனருடய மாந்தோப்பு. ஆண்களுக்கு கூட அடி வயிறு கலங்கும் அதை
கடந்து செல்கையில்.
            ஒற்றையாக ஒரு குருவி மட்டும் யாரையோ தேடி கூவிக் கொண்டிருந்தது. தலை விரித்து கிடந்த தென்னை மரங்களின் கீற்றுகள்  எதற்காகவோ பட படத்தது...
            வெருக்கு... வெருக்கு... என்று எட்டி நடை போட்டாள் மைனா. காலடியில்  காய்ந்து கிடந்த
சருகுகளும் சேர்ந்து சுதி போட்டது. அதனடியிலே ஒளிந்திருந்த பூச்சிகள் பல சிதறி ஓடியது...
ஒத்தவாடை தெரு. அதை தாண்டியதும் ஒருக்களித்து படுத்துக் கொண்டது போல் கண்மாய்க்கரை. கரையின் மேலே ஏறாமல் பக்கவாட்டிலேயே நடந்து சென்றால் வருவது மைனருடய மாந்தோப்பு. ஆண்களுக்கு கூட அடி வயிறு கலங்கும் அதை
 இன்னும் சிறிது தூரம் கடந்து விட்டால் போதும்... மைனருடைய மாந்தோப்பை கடந்து விடலாம்....
 அந்த இனம் புரியாத ஆபத்தை தாண்டி விடலாம்….
ஆனால் கூடவே தொடர்ந்து வரும் அந்த இன்னொரு ஓசையை கேட்டதும்...
உதறி தள்ளமுடியாத நிழலாய் அது தன்னை தொடர்கின்றதென்பதை உணர்ந்ததும்…          கண்கள் உள்ளுக்குள் இழுத்துக் கொண்டது போல ஒருவிதமான இருட்டு வந்து இமைகளை
கவ்வியது... 
         சேத்தாளி பெண்டுகள் துணையில்லாமல் தனியாக புறப்பட்டு வந்த தன் தவறை எண்ணி
நோக வைத்தது... பின்னே தொடர்ந்து வருவது யாராக இருக்கும்.... மாந்தோப்பு காவல்காரனோ...
தன் பள்ளிக்கூடத்து சேத்தாளி பெண்டுகளோ...அல்லது கிராமத்தில் இந்த் மாதிரியான விஷயங்களைப்
ற்றி விலாவாரியாக சொல்லும்  உப்பிடாரி கிழவி அடிக்கடி சொல்லும் அந்த மாந்தோப்பு முனியாக
இருக்குமோ..
      முனியைப் பற்றி நினைத்ததுமே தொடைகள் நடுங்க ஆரம்பித்தது... கால்கள் கிடு,கிடுவென ஆட
ரம்பித்தது....உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓட்டமும், நடையுமாய் தொடர்ந்தாள் . அதுவும்
கூடவே சேர்ந்து ஓடி வருவது கேட்டது...கால்களை அப்பிக் கொண்ட நெருஞ்சி முற்கள் வேறு உயிரை சல்லி சல்லியாக்கியது...
            சேத்தாளி பெண்டுகளுடனான சண்டையில் தனியாக வந்து இப்படி ஆபத்தில் மாட்டிக்கொண்டோமே....என நெஞ்சுக்குள் அடித்த
இதயத்தின் ஒலி கால்களின் ஒலியைப் போல பெருத்த சப்தமாக கேட்டது.
 சின்னஞ்சிறுசுகளாக கைகோர்த்து திரிய வேண்டிய வயசில் இந்த அர்த்தமற்ற சேத்தாளி சண்டை தேவைதானா...
 பெரிசுகள் போடும் அந்த அர்த்தமற்ற நீயா,நானா சண்டையில் இன்னும் எத்தனை வேதனைகள் யார், யாரைத்தான் தொடரப்போகிறதோ... ....
என அந்த சப்தம் பொட்டில் அடித்தது...
             மேல தெருவின் முன்னூறு குடியிருப்புகள் போக கீழதெருவில் என்பது குடியிருப்புகள் சேர்த்து முன்னூற்றி என்பது குடியிருப்புகளுக்காக
அரசாங்கத்தில் கட்டிக்கொடுத்த பள்ளிக்கூடம் அது...
கீழதெருக்காரர்களோடு சேர்ந்து அமர்ந்து படிப்பதற்க்கே பிடிக்காத சில குழந்தைகளுக்கு கீழதெருக்காரர்களோடு படிப்பில்
தோற்றுப்போவதில் எப்படி உடன்பாடு இருக்கும்.அதுவும் வன்மத்தை சொல்லிக்கொடுத்து வளர்க்கப்படும் பிஞ்சுகளுக்கு எப்படி அதை
எளிதாக எடுத்துக்கொள்ள முடியும்.
 மைனாவின் அப்பனுக்கு அவன் மகளை பெரிய படிப்பு படிக்க வைக்க வேண்டுமென ஆசை.அதற்க்காக அவளை அந்த ஆபத்தான மாந்தோப்பையும் தாண்டி பள்ளிக்கு அனுப்புகிறான்.
ஆனால் பள்ளியில் முதலாவதாக வரும் அவன் மகளுக்கும் அவள் சேத்தாளிப் பெண்டுகளுக்கும் இதனாலேயே சண்டை வரும் என்றும்,
அதனால் அவர்களை விட்டு மைனா இப்படி தன்னந்தனியாக நடந்து வருவாள் என்றும் எப்படி அவனுக்கு தெரியும்...
  சின்னஞ்சிறுசுகளின் வாழ்க்கையில் ஆத்திரமோ... கோபமோ... எதுவுமே நிரந்தரமானது இல்லை..மைனா திரும்பவும் போய்
பேசினால் அவர்கள் தன் கோபத்தை மறந்து விடுவார்கள்...ஆனால் மைனாதான் தேவையில்லாமல் தன்  பிடிவாதத்தை விடாமல் இப்படி
தொடர்கிறாள்.
 ராசக்கா...கல்யாணி மதினி....பூவரசி....வெள்ளாயி.... குருவு....என இந்த முனி அடித்து செத்துப்போன பெண்கள் எத்தனையோ
பேர் உள்ளார்கள்...
எதற்காக அவர்கள் சாக வேண்டும்?....ஏன் அவர்களை இந்த முனி அடிக்க வேண்டும்?...              பாதையின் ஓரமாக இருந்த செடியில் பஸ்கி எடுத்துக்கொண்டிருந்த ஓணான், மாடக்குளம் குஸ்தி வாத்தியாரை ஞாபகப்படுத்தியது...
அது புலி பாய்வதற்கு முன்னே பதுங்குவது போல பார்ப்பதற்கே பயமாக இருந்தது...
இந்த மாந்தோப்பு முனியைப்பற்றி ஊருக்குள் பெரிசும் சிறுசுமாக எல்லோரும் சொல்லுவார்கள்...
ஒத்தையாக ஒரு பெண் தனியாக மாட்டிக்கொண்டால் அவ்வளவுதானாம் .. ரத்தம் கக்க போட்டு புரட்டி எடுத்துவிடுமாம்…அவ்வளவு வெறி பிடிச்சதாம் இந்த முனி...
 மயிலக்காவும் அடிக்கடி சொல்லுவாள், "குமரிப்புள்ளைக மட்டும் அது எல்லைய மிதிச்சுடக்கூடாது...குரவளையை நெரிச்சுப்போடும்...",
என்று.
            அதென்ன இந்த முனிக்கு குமரிப்புள்ளைக மேல மட்டும் அப்படியொரு கோவம்....?
வேடிக்கை பார்க்க வந்ததைப்போல தும்பிகள் வட்டமடித்தன... கரட்டு...கரட்டு ... என கத்திக்கொண்டிருந்த ஒன்றிரண்டு காக்கைகளும்
இப்போது ஊட்டியை பிடித்துக்கொண்டு அமைதியானது.வேறு எந்தவித சப்தமும் இன்றி பின் தொடர்ந்து வரும் அந்த சப்தம் மட்டும்
துல்லியமாக கேட்டது...போச்சு....போச்சு....அதுவேதான்...இனி ஆத்தா,அப்பனுக்கு புள்ளையாகப் போய் சேர முடியாது...பொணமாகத்தான்
போய் சேரப் போகிறோம்….
 ராசக்கா...கல்யாணி மதினி....பூவரசி....வெள்ளாயி.... குருவு....என இந்த முனி அடித்து செத்துப்போன பெண்கள் வரிசையில்
இனி தன்னையும் சொல்லுவார்கள்...             கோடாங்கி அடித்து குறி கேட்டு சாமிக்கு கோபம் குறைய கெடா வெட்டி பொங்கல் வைப்பார்கள்...
ஆத்தாளும், அப்பனும் கூட இலையை வழிச்சு நக்கி விட்டு கையை துடைத்துப் போட்டுப் போய் விடுவார்கள்.
     பூவரசி,  வெள்ளாயி.... குருவுகூட குமரிப்பொண்ணுக மட்டும்தான். கல்யாணி மதினியும், ராசக்காவும் கல்யாணம் கட்டி பிள்ளை
பெத்தவர்கள்... கல்யாணி மதினியின் புருசன் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கொண்டு சந்தோஷமாக இருக்கிறான்.அவளின் பிள்ளைகள்
 அம்மாச்சி வீட்டில் அத்தைக்காரி வடிச்சுக்கொட்டும் மக்கிப்போன நெல்லுக்கஞ்சிக்கு கூட தொன்னாந்து கிடக்குதுகள் பாவம்.
அவளது ஏழு வயசுப் பையன் இடுப்பில் அர்னாக்கொடியில் இறுக்கிக் கட்டிய அவனது அப்பனின் அரை நிஜாரோடு வலம் வருவான்.
அது அவ்வப்போது அவிழ்ந்து தொங்கும்.  அதை  ஒரு கையால் தூக்கிப் பிடித்துக் கொண்டு அவன்  நடந்து போவதைப் பார்க்க பாவமாக இருக்கும்.
            இந்த முனியினால் தனக்கும் அப்படி ஒரு ஈனத்தனமான முடிவு வந்து விடக் கூடாது என கால்களின் வேகம் கூடியது. தொண்டைக்
குழியில் மூச்சு தத்தளித்தது....
             அதுவும் சளைக்காமல் வேகம் கூட்டி ஓடி வருவது கேட்டது.
             ஜெயிக்கப்போவது தானா அல்லது அந்த முனியா என்பது புரியாத பதட்டத்தில் இப்போது காற்றை கிழித்துக்கொண்டு ஓட ஆரம்பித்தாள்....
அதனது வேகமும் கூடியது...
              இடுப்பளவு வளர்ந்திருந்த கோரைகள் காற்றுக்கு கூட அசையாமல் அப்படியே உறைந்து போயிருந்தது...ஓட்டம் பிடித்த மைனாவின்
கால்களில் மிதிபபட்ட புற்கள் தலை தூக்கிப்பார்க்கப் பயந்து அப்படியே மண்ணோடு மண்ணாக படுத்துக்கொண்டது...
              இன்னும் கொஞ்ச தூரம்... இதை தாண்டி விட்டால் ராவுத்தர் காடு... அங்கு அவ்வப்போது ராவுததரம்மா வேலையாக வரும்...
அதை விட்டாலும் அடுத்ததாக செம்பூத்து  ஓடை....அங்கு தண்ணீர் எடுக்க நிறைய பொம்பளைகள் வருவார்கள்... அங்கும் ஆட்கள் யாரும்
 இல்லையென்றால் அடுத்ததாக ஓடை தண்ணீரை தேக்கி வைத்த குளத்தில் பாய்ந்து குளிக்க வரும் சிறுவர்கள் கூட்டம்....
அதிலும் ஆள் இல்லாமல் போனால் எந்த நேரமும் யாராவது ஒருவர் படுத்து உறங்கும் கல் மண்டபம்.... எளிதில் தப்பி விடலாம்.
அதன் பின் பயமில்லாமல் பள்ளிக்கூடம் போய் விடலாம்...
              ஆனால் இனி இப்படி வரக்கூடாது...
              பள்ளிக்குப் போனதும் நாமாகவே போய் பேசி விட வேண்டும்.அவர்கள் அப்பொழுதும் சமாதானம் ஆகவில்லை என்றால்
வள்ளிக்கண்ணு டீச்சரிடம் சொன்னால் போதும் சரியாகிவிடும்.
              இன்னும் கொஞ்ச தூரம்...
              இன்னும் கொஞ்ச தூரம்...
              கால்கள் கற்றாக இயங்கியது...   சற்றும் ஓய்வை நினைக்காது சிட்டாய்ப்பறந்தது...
              புத்தியும் மனதும் கூட புகை போக்கியிலிருந்து விடுபட்ட காற்று தறி கெட்டு கலைந்தோடுவதைப் போல ஓடியது.
              தூரம் குறையக் குறைய ...
              வேகம் அதிகரிக்க...அதிகரிக்க...
              தப்பித்து விடலாம் என்ற நம்பிக்கை சற்றே தலை தூக்கிய நேரத்தில் தான் அது நடந்தது...
             ஓடி வந்த முனியின் உஷ்ணம் தொட்ட மைனாவின் முதுகை அதன் கைகளும் தொட்டது...
             நாடி நரம்புகளெல்லாம் அப்படியே அடங்கிப்போய், "ஆத்தா… மகமாயி...அய்யனாரே....", என சரிந்து விழுந்தாள்.
             அடர்த்தியாக வளர்ந்து நின்ற கோரைகள் பஞ்சு மெத்தயைப் போல அவளை வாங்கித்  தன்  மேல் போட்டுக்கொண்டது.
               ராசக்கா...கல்யாணி மதினி....பூவரசி....வெள்ளாயி.... குருவு....என முனி அடித்து செத்துப்போன பெண்கள் அத்தனை பேரும்
வரிசையாக  வந்தார்கள்,மங்கலாக.
              வந்து, "வாடீ... மைனா...வா....நீயும் முனிக்கு படையலாயிட்டயா  ....இனிமே நீயும் எங்களோடு சேர்ந்து முனியப்பனோட வில்லு வண்டியிலே
ஜல்லு,ஜல்லுன்னு ஊரை சுத்தி வரலாம்..."
              "ஆமாண்டீ ... இனி உனக்கு சொர்க்கம்தான்...சாமியோட சாமியா ஆயிட்டே நீ..."என்றார்கள்.
              "சாமியோட சாமின்னா .... அப்போ நான் செத்துட்டேனா..."
              "சாகலைடீ...சாமியா ஆயிட்டே...."
              "அய்யய்யோ .... அப்போ... இனி நான் பள்ளிக்கூடம் போவ முடியாதா...படிக்க முடியாதா...எங்க வள்ளி டீச்சர் என்னை பெரிய படிப்பு
படிச்சு பெரிய வேலைக்கு போவேன்னுல்ல சொல்லியிருக்கு...அது நடக்காதா..."
             "அதான் நீ சாமியாயிட்டியேடீ ... இனிமே உனக்கு எதுக்கு படிப்பு..."
             "அடக்கடவுளே... இந்த முனி நம்ம தெருக்கார பொண்ணுகளை மட்டும்தான் இப்படி அடிச்சு கொல்லுமா ... மேல தெருக்கார பொண்ணுகளை
ஒன்னும் பண்ணாதா... ராவுத்தரம்மா எப்போவும் தனியாத்தான் இந்த காட்டுக்குள்ளே வந்து போகுது... அதெல்லாம் இந்த முனி கண்ணுல
படாதா ... "
            "அப்படியெல்லாம் பேசக்கூடாது...நீதான் புண்ணியம் பண்ணியிருக்கே...அதான்..."
             "புண்ணியமாம் புண்ணியம்...என் படிப்பு போச்சு...எங்க அப்பன் ஆசை பட்ட மாதிரி நான் பெரிய வேலைக்குப்போய் நல்ல பொழைப்பு
பொழைக்க முடியாது...அய்யோ..அய்யோ...."
             "அடிப்போடீ.. நல்ல பொழைப்புன்னா என்னடீ,,, என்னைக்காவது நம்ம தெருக்காரவுகளை இந்த ஊருல யாராவது மதிச்சு
பேசியிருப்பாவளா... இப்போ பாரு ஊரே நமக்கு பொங்கலு வச்சு சாமியா கும்பிடுது.."
            ”வருஷத்துக்கு ஒருமுறை கோடாங்கி அடிச்சு குறி கேட்டு நம்ம குறையையெல்லாம் தீர்த்து வைப்பாக... ஆருக்காவது இந்த பாக்கியம் கிடைக்குமா....”
             குப்புற விழுந்து விட்ட அவள் பாவாடை முழங்காலுக்கு மேல் ஏறி கலைந்து கிடந்தது...கைகளையும் கால்களையும் விரித்துப்
படுத்து குலுங்கி குலுங்கி ஆழ ஆரம்பித்தாள்.
             ஆத்திரமும்,அழுகையும் பொத்துக்கொண்டு வந்து நிலை கொள்ளாமல் புரண்டு, புரண்டு வேறு அழ வைத்தது...
             “ஐய்யையோ... ஐய்யையோ... அடீ மைனா... உனக்கு என்னடி ஆச்சு... என்னடி ஆச்சு...”
             - ஏதோ கனவில் கேட்பது போல கேட்டது...
             மெல்ல கண்களை இடுக்கி முகத்தை உயர்த்திப் பார்த்தாள்...
             மாந்தோப்பும், ஒற்றை குயிலும் பின்னணியில் தெரிய செங்கொடி அக்காதான் கலவரமாய் நின்றிருந்தாள்..
             துரத்தி வந்தது முனி அல்ல... செங்கொடி அக்காதான் என்பது தெரிந்ததும் தான் உயிரே வந்தது...
            “குமரிப்புள்ளைகன்னா குரவளையை நெரிச்சுப் போடும்னு மயிலக்கா அடிக்கடி சொல்லும் ... அந்த முனிதான் தொரத்துதோன்னு
நினைச்சு பயந்துட்டேன்... அதான்....”, என்றாள் வியர்த்துப்போய் ….
            “அடிப்போடீ… தாயைத் தாய் அடிக்குமா.... பேய்தான் அடிக்கும்...நீ எழுந்து வா”, என்றாள் செங்கொடி அக்கா…
            - பெயருக்கு ஏற்றாற்போல மிகவும் தைரியமான முற்போக்குவாத பெண் அவள்.
            எழுந்து கை, கால்களை தட்டி விட்டுக்கொண்டாள். அப்போதும் மிரட்சி இருந்தது.
           தாயைத் தாய் அடிக்காதுதான். பின், இந்த மாந்தோப்பு ஓரமாக அடித்து கொல்லப்பட்ட பெண்களின் சாவுக்கெல்லாம் யார் காரணமாக
இருப்பார்கள்.
          இந்த தோப்பைத் தாண்டி தனியாக ஒரு பெண்ணை போக விடாது  ஓட,ஓட எது விரட்டி அடித்திருக்கும்...
          பாடத்தில் மட்டுமல்ல... வேறு எந்த விஷயத்தில் சந்தேகம் கேட்டாலும் சரியான பதில் சொல்வாள் மைனாவின் வகுப்பு ஆசிரியை
வள்ளிக்கண்ணு.
          இந்த மாந்தோப்பு விசயம் பற்றி ஒரு முறை பள்ளிக்கூடத்தில் வள்ளிக்கண்ணு டீச்சரிடம் கேட்டபோது   "பொம்பளை இல்லையின்னா பொறப்பெடுக்க முடியுமா...இந்த முனியைப் போலத்தான் நாதியத்த காட்டுக்குள்ளே காத்தா அலையணும்...
பொம்பளையை அடிச்சு கொல்லுறது சாமியா மட்டுமில்லை...மனுசனாக் கூட இருக்க முடியாது...அடிச்சது மாந்தோப்பு முனியா இருக்காது....
மாந்தோப்பு மைனராத்தான் இருக்கும்..."என்று சொல்லுவாள்.
          மாந்தோப்பு… ராவுத்தர்காடு... செம்பூத்து ஓடை... பள்ளிக்கூடத்து சாலை...என வழி நெடுகிலும் செங்கொடி அக்காவும் அதையேதான்
சொல்லிக் கொண்டு வந்தாள்.
         அவள் மேலும் ஒன்று சொன்னாள்,  "முனியோ, மைனரோ... பொம்பளையை கொல்லுற சென்மத்தை ஊருப் பொம்பளைகளெல்லாம் ஒன்னாச் சேர்ந்து ஓட,ஓட விரட்டி
அடிக்கணும்...."என்று.
          "சீ...ச்சீ ...என்ன வார்த்தை சொல்லுறே.... முனியப்பனை அப்படியெல்லாம் சொல்லாதே...நீ சொன்னது போல கொன்னது மாந்தோப்பு
முனியா இருக்காது...மாந்தோப்பு மைனராத்தான் இருக்கும்..." என்று பதறிப் போய் மறுத்தாள்.
         பள்ளிக்கூடத்தில் வள்ளிக்கண்ணு டீச்சர் பாடம் நடத்தும் போது ஊர் பெண்களெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து யாரையோ விரட்டி ஓட...
அவர்களுக்கு முன்னே மாந்தோப்பு மைனர்  தலை தெறிக்க ஓடுவது போல நினைத்து, நினைத்துச் சிரித்துக் கொண்டாள்.
         அவள் நினைப்புக்குள்  மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க ஓடிய மைனரின்  கால்களில் நெரிஞ்சியும், காய்ந்து போன கோரைகளின் கீறல்களும் ...
அந்த பெண்களோடு சேர்ந்து இன்னும் துரத்தித் துரத்தி அடிக்க... மைனர்   வேட்டியைக் கூட அவிழ்த்து விட்டு ஓடினார் .....
        அதை கல்யாணி மதினியின் ஏழு வயது மகன் ஒரு கையில் தூக்கிப் பிடித்த அரை நிஜாரோடு விழுந்து விழுந்து சிரித்து வேடிக்கை
பார்த்தான்…
மைனாவுக்கு வகுப்பு முடியும் வரை சிரிப்பு அடக்க முடியாமல் வந்துகொண்டுதானிருந்தது.
வள்ளிக்கண்ணு  டீச்சர் கவனிக்கவில்லை

tamil short story about tamil people and little girl called mina by writter karthikeyan sugudevan famos writer in tamil Mina - Karthikeyan Sugutavan - Short story

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.